டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார்- கோவா அரசு விசாரணைக்கு உத்தரவு!
பனாஜி: டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த கோவா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெஹல்கா புலனாய்வு வார இதழின் நிகழ்ச்சி ஒன்று கோவாவில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால், சக பெண் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருக்கிறார்.
தருண் தேஜ்பாலின் பாலியல் தொந்தரவு எல்லை மீறிப் போகவே டெஹல்கா நிர்வாகத்திடம் அப்பெண் பத்திரிகையாளர் புகார் செய்திருக்கிறார். இது தொடர்பாக நிர்வாக ரீதியான விசாரணைகள் நடைபெற்ற நிலையில் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் 6 மாத காலத்துக்கு ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் தருண் தேஜ்பால் மின் அஞ்சல் ஒன்றை நிர்வாக ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் இதை பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் ஏற்கவில்லை. இது தேஜ்பால் தம்மை காப்பாற்றிக் கொள்ளவே வழிவகுக்கும் என்றும் உரிய கமிட்டி ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அத்துடன் தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோவா மாநில அரசும் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications