மோடி, அமித்ஷா சொந்த மண்ணில் பா.ஜ.க.வை வீழ்த்த மும்முரம்- வியூகப் புலிகளை அனுப்புகிறது காங்.

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் தற்போதே பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் களப் பணிகளை தொடங்கிவிட்டன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உ.பி, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஜரூராக மேற்கொண்டு வருகின்றன.

மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், மேலிடப் பொறுப்பாளர்கள் என பலரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் தேர்தல் பிரசாரத்தையும் கூட இப்போதே இந்த 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தொடங்கியும் விட்டன.

குஜராத்துக்கு முன்கூட்டியே தேர்தல்

குஜராத்துக்கு முன்கூட்டியே தேர்தல்

இதனிடையே 5 மாநில தேர்தல்களுடன் குஜராத் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு டிசம்பரில்தான் முடிவடைகிறது. ஆனால் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனைகள் படுதீவிரமாக நடந்து வருவதாகவே கூறப்படுகிறது.

முதல்வர் திடீர் மாற்றம்

முதல்வர் திடீர் மாற்றம்

குஜராத் மாநிலத்தில் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென முதல்வர் விஜய் ரூபானியை மாற்றியது பா.ஜ.க. அம்மாநில புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் (படேல்) இன்று பதவியேற்றுக் கொண்டார். விஜய் ரூபானி ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். பூபேந்திர பட்டேல், பட்டேல் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த முதல்வர் மாற்றம் நடந்திருக்கிறது.

ஹர்திக் பட்டேல் சாடல்

ஹர்திக் பட்டேல் சாடல்

பாஜகவின் இந்த நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவரும் பட்டேல் சமூகத்தின் இடஒதுக்கீட்டுக்காக போராடியவருமான ஹர்திக் பட்டேல், கடந்த 25 ஆண்டுகாலமாக குஜராத்தை ஆண்டு வரும் பாஜகவால் எந்த ஒரு நன்மையுமே கிடைக்கவில்லை. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. இப்போது திடீரென தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் பதவியை மாற்றி இருக்கிறது பாஜக. இதனால் எந்த பயனும் ஏற்படாது என்பதை மறந்துவிடக் கூடாது என கூறியிருந்தார்.

விஸ்வரூப காங்கிரஸ்

விஸ்வரூப காங்கிரஸ்

பிரதமர் மோடி மூன்று முறை முதல்வராக இருந்து பாஜகவின் கோட்டையாக குஜராத்தை உருவாக்கி இருந்தார். ஆனால் அண்மைக்காலமாக பாஜகவின் கோட்டைக்குள் காங்கிரஸ் சலசலப்பைக் காட்டி வருகிறது. 2012-ம் ஆண்டு தேர்தலில் 61 இடங்களில் காங்கிரஸ் வென்றது. பாஜகவோ 3 இலக்கத்தில் தொகுதிகளை பிடித்தது. ஆனால் 2017-ம் ஆண்டு பாஜகவால் 99 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 16 தொகுதிகள் கிடைத்தன. இதற்கு காரணம் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் போன்றவர்கள்தான்.. இப்போது ஹர்திக் பட்டேல், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். ரகசிய சர்வே?

ஆர்.எஸ்.எஸ். ரகசிய சர்வே?

குஜராத் முதல்வர் மாற்றம் தொடர்பாக ஹர்திக் பட்டேல் கூறிய கருத்து ஒன்று மிக முக்கியமானது. அதாவது அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய ரகசிய சர்வேயில், காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கும்; அதாவது காங்கிரஸுக்கு 96 முதல் 100 இடங்கள் கிடைக்கும்; பாஜகவுக்கு 38% வாக்குகள் அதாவது 80 முதல் 84 இடங்கள்தான் கிடைக்கும் என முடிவுகள் கிடைத்தனவாம். இதனால்தான் நிலவரத்தை சரி செய்ய இப்போது முதல்வரை மாற்றிப் பார்க்கிறது பாஜக என்கிறார் ஹர்திக் பட்டேல். இதனை எல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி என்கின்றன டெல்லி தகவல்கள்.

யாரை அனுப்புவது?

யாரை அனுப்புவது?

குஜராத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் இப்போது இல்லை. அவர் காலமான நிலையில் யாரை மேலிடப் பொறுப்பாளராக அனுப்புவது என தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம் காங்கிரஸ் மேலிடம். இதில் முதலிடத்தில் இருப்பவர் பூபேஷ் பாகல். சத்தீஸ்கர் முதல்வரான பூபேஷ் பாகல், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதில் செம கில்லாடியானவர். அதேபோல் குஜராத்தின் அண்டை மாநிலமான சச்சின் பைலட்டும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார். இருவருமே தங்களது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வெல்ல வைத்து அரியாசனத்தில் ஏற்றியவர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மண்ணில் பாஜகவை வீழ்த்தினால் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு புதுபலம் கிடைக்கும் என்பதால் குஜராத் தேர்தலை படுசீரியசாகவே எடுத்துக் கொண்டிருக்கிறதாம் அக்கட்சி மேலிடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+