நீட் தேர்வில் டாப் ரேங்க் பெற்ற குஜராத் மாணவி.. ஆனால் +2 தேர்வில் தோல்வி .. அதுவும் 2 முறை!
காந்திநகர்: நாடு முழுக்க இப்போது மருத்துவ கல்விக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்தாண்டு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் நீட் தேர்வில் 705 மார்க் பெற்ற குஜராத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், +2 தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இது நாடு முழுக்க பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த அந்த மாணவி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மார்க் பெற்று இருக்கிறார். அதேநேரம் அங்கு நடந்த 12ஆம் வகுப்புத் தேர்வில் அவர் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் மறுதேர்வு எழுதினார்.

தோல்வி: இருப்பினும், இப்போது அவர் மறுதேர்விலும் தோல்வியடைந்துள்ளார். +2 தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியதால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் கூட கல்லூரிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் அதிக மார்க் பெற்ற மாணவி, +2 தேர்வில் தேர்ச்சி கூடப் பெற முடியாமல் போனது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மார்க் கம்மி: அந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 தேர்வுகளை எழுதி இருக்கிறார். இதில் அவர் இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் ஜூன் மாதம் நடந்த துணைத் தேர்வுகளை எழுதியிருக்கிறார். ஆனால், அதிலும் கூட அவரால் இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொது தேர்வில் அவர் இயற்பியல் பாடத்தில் 21 மார்க் மட்டுமே பெற்றார். அதேபோல ஜூன் மாதம் நடந்த மறுதேர்விலும் அவரால் வெறும் 22 மார்க் மட்டுமே பெற முடிந்துள்ளது.
வேதியியல் பாடத்தில் மெயின் தேர்வில் அவர் வெறும் 31 மார்க் மட்டுமே பெற்றார். இதையடுத்து நடந்த துணைத் தேர்வில் சரியாக பாஸ் ஆகத் தேவையான 33 மார்க்குகளை மட்டுமே அவர் பெற்றார்.
சந்தேகம்: துணைத் தேர்வு முடிவுகள் அவர் பெற்ற மதிப்பெண்களால் அவரது அதிக நீட் மார்க் குறித்தும் பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள கல்வியாளர் ஒருவர் கூறுகையில், "நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் வழக்கு நடக்கும் இந்த சூழலில் இந்த வழக்கைப் புறக்கணிக்க முடியாது. +2 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத மாணவி நீட் தேர்வில் இவ்வளவு அதிக மார்க் பெறுவது சாத்தியமற்றது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சமீபத்தில் தான் தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் நீட் தேர்வில் எவ்வளவு மார்க் பெற்றனர்.. +2 தேர்வில் எத்தனை மார்க் பெற்றனர் என்பதை ஒப்பிட்டு மார்க் ஷீட்கள் இணையத்தில் பரவின, அதில் பல மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மார்க் பெற்றாலும், +2 தேர்வில் பெரியளவில் மார்க் பெறவில்லை.
+2இல் ரொம்ப மோசம்: இந்த குறிப்பிட்ட மாணவி நீட் தேர்வில் 705 மார்க் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் இயற்பியலில் 99.89%, வேதியியலில் 99.14%, உயிரியலில் 99.14% மார்க் பெற்றிருந்தார். ஒட்டுமொத்தமாக 99.94% மார்க் பெற்றிருந்தார். இதன் மூலம் அவரால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்கும் சூழல் இருந்தது. ஆனால், இரண்டு முறை முயன்றும் அவரால் +2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் அவரால் கல்லூரியில் சேர முடியாத சூழல் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications