ராகுல் காந்தி மீதான புகாரில் ஆதாரம் இல்லை.. குஜராத் ஹைகோர்ட்டில் அபிஷேக் சிங்வி வாதம்
அகமதாபாத்: பிரதமர் மோடி குறித்து பேசியதாக ராகுல்காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசினார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்தது. எனினும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு, ஜாமீன் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை செயலகம் தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பதாக அறிவித்தது. இதனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர். போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.
டெல்லியில் அவர் வசித்து வந்த இல்லத்தையும் காலி செய்ய நேரிட்டது. அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி அவர்கள், தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்ததற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த மனுவை குஜராத் நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் முன்பாக நடைபெற்றது.

ராகுல்காந்தி சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி வாதங்களை முன்வைத்தார். பிரதமர் மோடி குறித்து பேசியதாக ராகுல்காந்தி மீதான குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை என்று கூறினார். பல எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவழக்குகளில் கூட தண்டனையை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளதாகவும் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
சூரத் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு குஜராத் உயர்நீதிமன்றம் தடை அளிக்காவிட்டால் அவர் 8 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன் அடுத்தடுத்த மேல்முறையீடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்புக்கும் குஜராத் ஹைகோர்ட் தடை அளிக்கும் பட்சத்தில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதும் நிறுத்தப்படும், இதன் மூலம் அவர் மீண்டும் லோக்சபாவிற்குள் செல்ல முடியும். எனவே குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள ராகுல்காந்தியின் மனு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications