'குஜராத் மாடல் வளர்ச்சி' வெறும் விளம்பரம்தான்.. 25ஆண்டுகளில் மருத்துவமனைகள் இல்லை.. காங்கிரஸ் தாக்கு
காந்திநகர்: குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு மருத்துவமனை கூட புதிதாகக் கட்டப்படவில்லை எனக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.
அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குஜராத்தில் பாஜக அரசு மருத்துவமனைகளைக் கட்டவில்லை எனக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

குஜராத் மாடல்
குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜீவ் சதவ் கூறுகையில், "கடந்த 25 ஆண்டுகளாகக் குஜராத்தில் பாஜக தான் ஆட்சியில் இருந்தது. இந்த 25 ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு மருத்துவமனைகூட கட்டப்படவில்லை. இந்த 25 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் நரேந்திர மோடி முதல்வராக இருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவைக் குஜராத் மாடலில் முன்னெற்றிக் காட்டுவேன் என மோடி குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதைச் செய்துவிட்டார். குஜராத் மாடல் என்பது வெறும் விளம்பரம் மட்டுமே" என அவர் தெரிவித்தார்.

25 ஆண்டுகளில் ஒரு மருத்துவமனை கூட இல்லை
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் குஜராத் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சக்திசிங் கோஹில் கூறுகையில், "பாஜக ஆட்சியில் மாநிலத்தில் புதிய மருத்துவமனைகள் ஒன்றுகூடக் கட்டப்படவில்லை. கிராமங்களில் அவர்கள் அமைத்துள்ள ஆரம்பச் சுகாதார மையங்களை மருத்துவமனைகள் எனக் கூற முடியாது. மாநிலத்தில் தற்போதுள்ள அனைத்து பெரிய மருத்துவமனைகளும் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.

தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவு
கடந்த முறை குஜராத் சட்டசபைத் தேர்தலில் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனப் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார் 2020இல் தான் அதற்கான அடிக்கல்லை நாட்டினார்கள். இப்போதுவரை அது கட்டுமானத்திலேயே உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் பொதுச் சுகாதார கட்டமைப்பு மிகவும் வலுவாக இருந்தது. ஆனால் மோடி முதல்வரானதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவான கொள்கைகளால் மாநிலத்தின் பொதுச் சுகாதார கட்டமைப்பு முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.

பொது சுகாதார நிலை
குஜராத் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் வெறும் 16 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே சிடி ஸ்கேன் வசதி உள்ளது. மாநிலத்திலேயே ஒரே ஒரு மருத்துவமனையில் மட்டும்தான் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகளும் 16 மாவட்டங்களில் மட்டுமே இருப்பதாகவும் பாஜக அரசு அம்மாநிலச் சட்டசபையில் சமீபத்தில் கூறியிருந்தது.

நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை
குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்துள்ள ஏழு மாவட்டங்களில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கைகள் இல்லை என அம்மாநில அரசு சமீபத்தில் உயர் நீதிமன்றத்திலும் கூறியிருந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்டபோதே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

காங்கிரஸ் விமர்சனம்
மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் பாஜக தலைவர்கள் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தைச் சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கி, தங்களுக்குத் தேவையானவர்களுக்கு மட்டும் வழங்குவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. குஜராத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கவே பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

குஜராத் கொரோனா பரவல்
குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13,804 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. நேற்று 99,744 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல 142 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பும் 6,019ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications