குஜராத் விபத்து: ஆற்றில் அள்ள அள்ள வரும் உடல்கள்.. பாஜக எம்பியின் குடும்பத்தினர் 12 பேர் பலி!
அகமதாபாத்: குஜராத் மோர்பி கேபிள் பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பாஜக எம்பியின் குடும்பத்தினர் 12 பேரும் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு என்ற ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடப்பதற்காக பழங்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் அமைக்கப்பட்ட கேபிள் பாலம் ஒன்று உள்ளது.
இந்த பாலத்தில் கடந்த 6 மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இதையடுத்து கடந்த 26-ஆம் தேதி இந்த பாலம் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.

ஆற்றுக்குள் விழுந்த மக்கள்
இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாகவும் அங்கு 500க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாலம் அறுந்து விழுந்தது. இதனால் அதில் நின்று கொண்டிருந்த சிறு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பாலத்தில் நின்றுகொண்டிருந்த சுமார் 300 பேர் அப்படியே கொத்து கொத்தாக ஆற்றில் விழுந்தனர்.

அபயக்குரல் எழுப்பிய மக்கள்
இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது. பலரும் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். உடனடியாக தேசிய மீட்பு படையினர் உள்பட பல மீட்பு குழுவினர் வந்து நேற்று இரவில் இருந்து ஆற்றில் விழுந்தவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை இந்த விபத்தில் 141 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 180க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்பியின் குடும்பத்தினர் 12 பேர்
இந்தநிலையில் பாஜக எம்பி ஒருவரின் குடும்பத்தினர் 12 பேர் இந்த குஜராத் கேபிள் பாலம் விபத்தில் பலியான தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் எம்.பியான மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் சகோதரி குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர் என்று தெரிவித்தார். மேலும் இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து மீட்பு பணி
இது தொர்பாக அவர் கூறுகையில், " குஜராத் மோப்ரி கேபிள் பாலம் விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியானது மிகுந்த வருத்தமளிக்கிறது. விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் நான் இங்கே வந்தேன். தற்போதும் இங்கு தான் இருக்கிறேன். என் கண் முன்பே 100க்கும் மேற்பட்டோரின் உடல்களை எடுத்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய மேலும் பலரை ரப்பர் படகுகள் உதவியுடன் தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

5 குழந்தைகள் உள்பட 12 பேர்
இந்த விபத்தில் எனது சகோதரி குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 குழந்தைகளும் அடங்கும். 140-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் பலியானது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார். இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications