ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஜெயிக்கனுமே.. ஆர்எஸ்எஸ் தொண்டர்களை களமிறக்கிய பாஜக!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் பாஜக தரப்பு, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரை தேர்தல் பணிகளில் களமிறக்கி இருக்கிறது. பாஜகவுக்கு வெற்றி கிடைப்பது கடினம்தான் என்ற போதும் கடைசி நம்பிக்கையாகவே ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிராக பெரும் கோப அலை வீசுகிறது. முன்னாள் முதவர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளே கடுமையான மக்கள் கோபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. என்னதான் மனோகர் லால் கட்டார் நீக்கப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டாலும் ஹரியானா பாஜகவின் முகமாகவே மனோகர்லால் கட்டார் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் கோபம் தணியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால்தான் பாஜகவின் பிரசாரங்களிலும் சரி பிரதமர் மோடி உள்ளிட்டோரின் பிரசாரங்களிலும் சரி மனோகர்லால் கட்டார் முகமே காட்டப்படுவதும் இல்லையாம்.
ஹரியானா தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும் வாய்ப்பில்லை என்பதை அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கடந்த ஆகஸ்ட் மாதமே திட்டவட்டமாகவும் தெரிவித்துவிட்டதாம். ஆர்.எஸ்.எஸ். நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் பாஜக மேலிடத்துக்கு இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டனவாம்.
ஏற்கனவே லோக்சபா தேர்தலில் பல மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாஜகவை கைவிட்டதால் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்பது நாடறிந்த ஒன்று. இதனையடுத்தே ஹரியானாவில் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கை ஓங்கி இருக்கும் தொகுதிகளிலாவது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் களமிறக்கப்பட வேண்டும் என பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதாம். இதனை ஏற்று ஹரியானா தேர்தல் களத்தில் கடைசி கட்ட முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் திடீரென பல்லாயிரக்கணக்கில் களமிறக்கப்பட்டுள்ளனராம்.
களத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனுப்பும் நிலவரத்தின் அடிப்படையில் ஹரியானா பாஜக தலைவர்கள் செயல்பட வேண்டும் என்றும் டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். ஹரியானாவில் மிக மோசமான தோல்வியைத் தவிர்க்க ஆர்.எஸ்.எஸ். களமிறங்கியிருப்பது டெல்லி பாஜக மேலிடத்துக்கு சற்று ஆறுதல் தரக்கூடியதுதான் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications