வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்ட காங்கிரஸ் தலைவர்கள்!
டெல்லி:வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் அறிவிக்கப்பட்ட பிறகுதான், அதன் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியப்போகிறது. ஆனால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கோ தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, பாஜகதான் ஆளப்போகிறது என்பது உறுதியாக தெரிந்துவிட்டதைப்போல உள்ளது அதன் நடவடிக்கைகள்.

ராகுல விட்டுருங்க பாவம்..
எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் வெளியான உடனேயே, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் எல்லாம் போர்வீரர்களைப்போல ராகுலை சூழ்ந்து நின்று கொண்டு மனித கவசமாகவே மாறிப்போய்விட்டனர். "ஐயய்யோ... ராகுல்காந்தியா... அவருக்கும் இந்த தேர்தலுக்கும்தான் சம்மந்தமேயில்லையே.. அவர் ஒரு பச்ச மண்ணு.. காங்கிரஸ் தோற்றால் அவர் எப்படி பொறுப்பாவார்" என்கிற ரீதியில் ஸ்டேட்மென்ட்டுகளை அள்ளி தெளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இத்தனைக்கும் ராகுல்காந்தி, எங்கேயோ அன்னாந்து பார்த்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார போஸ்டர்கள் கூட இன்னும் பல தெருக்களில் கிழியாமல் உள்ளது. தேர்தலில் ராகுலை முன்னிறுத்திதான் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது என்பது சாமானியர்களுக்கும் தெரியும். இருப்பினும் அவருக்கு தோல்வியில் தொடர்பில்லை என்று கூற ஆரம்பித்துள்ளது, காங்கிரசின் தொடை நடுக்கத்தை உறுதியாக காண்பிக்கிறது.

இப்பவே அனுப்பிட்டாங்களே...
அடுத்த அரசு பதவியேற்கும் வரை மன்மோகன் சிங்தான் பிரதமராக இருந்தாக வேண்டும். ஆனால் அவசரமாக நேற்றே அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தி 'டாட்டா' காட்டிவிட்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான அரசு மீண்டும் அமைந்தால் அப்போது ராகுல்காந்தியை பிரதமர் நாற்காலியில் உட்கார செய்துவிட்டு ஃபேர்வெல் பார்ட்டியை மன்மோகன் வைத்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கப் போவதில்லை, 16ம்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பாஜக தலைமையிலான அணி ஆட்சிக்கு வந்துவிட்டால், அதன்பிறகு நம்மை யார் மதிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தால் முன்கூட்டியே பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி
அரசின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் கடைசி நிமிடத்தில் ராணுவ தளபதியை நியமிப்பது போன்ற முக்கியமான ஒரு முடிவை எடுக்க காங்கிரஸ் காட்டிய அவசரம், 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா' என்பதைப்போல அக்கட்சியின் தோல்வி பீதியை வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது. மத்திய அரசுடன் ஒத்துப்போகக்கூடியவர் ராணுவ தளபதி போன்ற முக்கிய பதவியில் இருக்க வேண்டும். எனவே புதிய அரசு வந்த பிறகு அப்பதவிக்குரியவரை நியமிப்பது நியாயம்.
காங்கிரஸ் அரசோ தேர்தல் ஆணையத்தின் அனுமதியை போராடி பெற்று, தல்பிர் சிங் சுகாக்கை ராணுவ தளபதியாக்கியுள்ளது. இதை பாஜக எதிர்த்தது. எனவே பாஜக ஆட்சியமைத்தால் ராணுவ தளபதியை மாற்றக்கூடும், அவ்வாறு செய்வது ராணுவத்துக்குள் அரசுக்கு எதிராக மனக்கசப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

நீதிபதி நியமனம்
குஜராத்தில் இளம் பெண் ஒருவரை வேவு பார்த்த குற்றச்சாட்டு தொடர்பாக மோடிக்கு எதிராக நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க அவசரப்பட்டது காங்கிரஸ். ஆனால் சரத்பவார், உமர் அப்துல்லா போன்ற கூட்டணி கட்சி தலைவர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை ஒத்திப்போட்டது. தேர்தலுக்கு பிறகு 3வது முறையாக நாம்தான் அரசமைக்கப் போகிறோம், அப்போது சோப்பு போட்டு முகத்தை கழுவிட்டு பிரெஷ்சாக இதையெல்லாம் செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை.

எல்லாம் முடிஞ்சுபோச்சு
இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என்பதை உளவுத்துறையை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் அதன் தலைவர்களுக்கு இல்லை. வடிவேலு ஒரு திரைப்படத்தில் கூறுவதைப்போல 'உளவுத்துறை அளவுக்கு நான் வொர்த் இல்லப்பா' என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். உளவுத்துறை என்ன, சிறுபிள்ளையை கேட்டாலும் காங்கிரசுக்கு 'ஊ..ஊ..' என கூறிவிடும். எனவேதான், மூட்டை முடிச்சுகளை இப்போதே கட்ட ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரஸ் கற்ற பாடம்
தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தழுவ என்ன காரணம் என்ற பாடத்தை இப்போதுதான் காங்கிரஸ் கற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் பொதுமக்களை சென்று பார்த்து கட்சி தலைவர்கள் கைகுலுக்குவதால் மட்டும் ஓட்டுபோடமாட்டார்கள் என்பது இப்போது தெரியத்தொடங்கியுள்ளது.
மக்கள் விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்து செயல்படும் ஒரு அரசுதான் அவர்களுக்கு தேவைப்படுகிறது. பழைய குடும்ப பாரம்பரியத்தை பார்த்து வாக்களிக்க இளம் தலைமுறை தயாராக இல்லை என்பதை 16ம் தேதி மாலை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் அறிந்துகொள்ளும்.












Click it and Unblock the Notifications