சினிமா சீன் தோற்றுவிடும்.. ஆவேசத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி! ஆடிப் போன கேரள பத்திரிகையாளர்கள்
திருச்சூர்: மலையாள சினிமா நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வரிசை கட்டி வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் மலையாள சினிமா உலகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, அவர்களை மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி தாக்க முயன்று மிரட்டல் விடுத்த சம்பவம் புதிய சர்ச்சையாகி உள்ளது.
மலையாள திரை உலகை அதிரவைத்துக் கொண்டிருப்பது ஹேமா கமிட்டி அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நடிகர்கள் மீதான நடிகைகளின் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்துமீறல் புகார்களும். இதனால் மலையாள சினிமா சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து சித்திக், ரஞ்சித் என சீனியர்கள் விலகிவிட அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது கேரளா.

ஹேமா கமிட்டி என்பது ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் அதற்கு முன்னணி நடிகர் திலீப் உடந்தையாக இருந்து சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்டது. 2017-ம் ஆண்டே ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு 2019-ல் அறிக்கையையும் கேரளா அரசிடம் தாக்கல் செய்தாகிவிட்டது. ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கை விவரங்கள் அண்மையில்தான் வெளியாகி பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் முன்னணி நடிகைகள், பல நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் அத்துமீறல் புகார்களை அடுக்குவதும் அதை நடிகர்கள் மறுப்பதும் ஒவ்வொரு நாளைய புதிய அத்தியாயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய இணை அமைச்சரும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகருமான சுரேஷ் கோபி, பத்திரிகைகள் சம்பாதிக்க நல்ல தீனியாகத்தான் இது இருக்கப் போகிறது. பத்திரிகைகள் மோதல்களை உருவாக்கிவிட்டு ரத்தம் குடிக்க காத்திருக்கின்றன. பத்திரிகைகள்தான் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கேரளாவின் திருச்சூர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியை செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் சுரேஷ் கோபியோ செய்தியாளர்களின் மைக்குகளை தள்ளிவிட்டு, கை விரலை உயர்த்தி செய்தியாளர்களை 'சினிமா'வில் மிரட்டுவது போல மிரட்டிவிட்டு காரில் ஏறினார். அப்போதும் செய்தியாளர்கள் இடைவிடாமல் கேள்விகளை எழுப்ப, கடும் கோபத்தைக் கொட்டியபடியே புறப்பட்டுச் சென்றார் சுரேஷ் கோபி.
நடிகரான சுரேஷ் கோபி, மத்திய இணை அமைச்சரான பின்னரும் ஃபேஸ்புக் தகவலின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து போய்விடுமோ என தமிழ்நாடு- கேரளா மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்த முயன்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications