பாஜகவில் சேர்ந்தது குத்தமா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 2 சுயேச்சைகளுக்கு நேர்ந்த கதி.. போச்சே
சிம்லா: அரசனை நம்பி புருஷனை கைவிடலமா? என ஒரு பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்ப இமாச்சல பிரதேசத்தில் சுயேச்சைகள் 3 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமாகி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளனர். அதோடு இமாச்சல பிரதேச சட்டசபையில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 2 புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் முதல்வராக சுக்வீந்தர் சிங் பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்த 2022 சட்டசபை தேர்தலில் 3பேர் சுயேச்சை எம்எல்ஏக்களாக தேர்வாகினர். டெஹ்ரா தொகுதியில் ஹோசியார் சிங், ஹமிர்பூர் தொகுதியில் ஆசிஷ் சர்மா, நாலகார்க் தொகுதியில் கேஎல் தாகூர் ஆகியோர் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடந்த ராஜ்யசபா தேர்தலில் 3 பேரும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அதன்பிறகு அவர்கள் 3 பேரும் சுயேச்சை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
இதையடுத்து பாஜக சார்பில் 3 பேரும் அந்ததந்த தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதன்படி டெஹ்ரா தொகுதியில் ஹோசியார் சிங், ஹமிர்பூர் தொகுதியில் ஆசிஷ் சர்மா, நாலகார்க் தொகுதியில் கேஎல் தாகூர் ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்நிலையில் தான் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் சுயேச்சை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த 2 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
அதாவது டெஹ்ரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ஹோசியார் சிங் முதல்வர் சுக்வீந்தர் சிங்கின் மனைவி கமலேஷ் தாகூரிடம் 9,399 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேபோல் நாலகார்க் தொகுதியின் பாஜக வேட்பாளர் கேஎல் தாகூரை காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா 8,990 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாறாக ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஆசிஷ் சர்மா மட்டும் 1,571 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்தர் வர்மாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் சுயேச்சை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்து களமிறங்கிய 3 பேரில் 2 பேர் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர். ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இத்தகைய சூழலில் தான் இமாச்சல பிரதேச மாநில வரலாற்றில் முதல் முறையாக 2 முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.
முதலாவது விஷயம் என்னவென்றால் இமாச்சல பிரதேச சட்டசபையில் முதல் முறையாக கணவன்-மனைவி எம்எல்ஏக்களாக உள்ளனர். அதாவது ஏற்கனவே எம்எல்ஏவாகவும், முதல்வராகவும் உள்ள காங்கிரஸின் சுக்வீந்தர் சிங் உள்ளார். தற்போது டெஹ்ரா தொகுதியில் அவரது மனைவி கம்லேஷ் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் கணவன்-மனைவி ஒரே நேரத்தில் எம்எல்ஏவாக இருப்பது இது முதல் முறையாகும்.
2வது விஷயம் என்னவென்றால் இமாச்சல பிரதேச சட்டசபையில் எப்போதும் சுயேச்சை எம்எல்ஏக்கள் இருப்பார்கள். ஆனால் 2022ம் ஆண்டில் 3 பேர் சுயேச்சைகளாக வென்றனர். அவர்கள் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமாகினர். அதன்பிறகு இடைத்தேர்தலில் 3 பேரும் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில் 2 பேர் தோற்றுள்ளனர். ஒருவர் பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் முதல் மறையாக சுயேச்சை எம்எல்ஏக்கள் இல்லாத சட்டசபையாக இமாச்சல பிரதேசம் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications