"கறி கஞ்சி" குடிக்கிறதாலதான் பூமாதேவி வெடிக்கிறதாம்- இப்படி சொல்பவர் எல்லாம் ஐஐடி டைரக்டரா?- காங்.
சிம்லா: பொதுமக்கள் இறைச்சியை சாப்பிடுவதால்தான் நிலச் சரிவு, மேகவெடிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக சாமியார் ஒருவர் கருத்து தெரிவிக்கவில்லை.. நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி- மண்டியின் இயக்குநர் லஷ்மிதார் பெஹரா வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமயமலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசம் மிக கடுமையான மழையை எதிர்கொண்டது. இம்மாநிலத்தில் பல முறை மேகவெடிப்பு ஏற்பட்டு நகரங்கள் பலவும் பெருவெள்ளத்தில் மிதந்தன. அதேபோல கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு ஒட்டுமொத்த மக்களது இயல்பு வாழ்க்கையும் முடங்கின. இத்தகைய இயற்கை சீற்றங்களை 'மலை மாநிலங்கள்' அதுவும் இமயமலை மாநிலங்கள் எதிர்கொள்வது வழக்கமானதுதான்.

ஆனால் மேக வெடிப்பு, நிலச்சரிவுகளுக்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறேன் என ஐஐடி- மண்டியின் இயக்குநர் லஷ்மிதார் பெஹரா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.
ஐஐடி மண்டி இயக்குநர் லஷ்மிதார் பெஹரா, "விலங்குகளை கொன்று அதன் இறைச்சியை நாம் சாப்பிடுவது சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது. இதுதான் நிலச்சரிவு, மேக வெடிப்பு உள்ளிட்டவைகளுக்கும் காரணமாக இருக்கிறது. விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை நாம் நிறுத்தினால் இயற்கை பேரிடர்களின் பாதிப்புகளில் இருந்து நாம் தப்ப முடியும். அதாவது இறைச்சி போன்ற உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். மாணவர்களுடனான உரையாடலில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஐஐடி- மண்டியின் இயக்குநர் லஷ்மிதார் பெஹராவின் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பழங்காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்தது என பிரதமர் மோடி பேசுகிறார். மத்திய அமைச்சர் ஒருவருக்கு ஐன்ஸ்டீனுக்கும் நியூட்டனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. டார்வின் கோட்பாடுகளை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குகின்றனர். இப்போது ஐஐடி இயக்குநர் இப்படி ஒரு அபத்தமான கருத்தை தெரிவித்துள்ளார். அவரெல்லாம் அந்த பதவிக்கே பொருத்தம் இல்லாதவர் என்றார்.












Click it and Unblock the Notifications