குஜராத்தில் "போலி" சுங்கச்சாவடி! வெறும் 1.5 ஆண்டுகளில் பல கோடியை கொள்ளையடித்த கும்பல்! பகீர் பின்னணி
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் போலியாக டோல் கேட்டை அமைத்து அரசையே 1.5 ஆண்டுகள் ஏமாற்றி வந்த பகீர் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
நாடு முழுக்க இப்போது உள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த டோல் கட்டணம் நிச்சயம் செலுத்தியே ஆக வேண்டும். சாலை வரிகளைத் தனியாகச் செலுத்துவதால் சுங்கச்சாவடிகளை முதலில் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதேபோல இந்த சுங்கச்சாவடிகள் மூலம் சில மோசடிகளும் நடக்கிறது.

அதாவது இப்போது பாஸ்ட் டேக் மூலமாகவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதை வைத்து மோசடி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால், அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத் போலி சுங்கச்சாவடி: குஜராத் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட போலி டோல் கேட் கடந்த 1.5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது... அரசை ஏமாற்றிச் செயல்பட்ட இந்த சுங்கச் சாவடி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது.
2 நாள் சாப்பாடே இல்லை! பசியால் உயிரிழந்த பிச்சைக்காரர்! ஆனா கையில் இருந்ததோ ஒரு லட்சம்! என்ன நடந்தது
குஜராத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள தனியார் நிலத்தில் இந்த போலி சுங்கச்சாவடியை அமைத்துள்ளனர். நெடுஞ்சாலை மிக அருகே இந்த சுங்கச்சாவடியை அமைத்து அதை அப்படியே சாலையுடன் இணைத்துவிட்டனர். இதனால் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் அனைவரும் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் என யாருக்கும் இது ஒரு போலி சுங்கச்சாவடி என்பது தெரியவில்லை.
1.5 ஆண்டுகள்: சுமார் 1.5 ஆண்டுகளாகவே இப்படியே அவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 1.5 கோடி ரூபாயை அவர்கள் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. இந்த மோர்பியில் தேசிய நெடுஞ்சாலையில் உண்மையாகவே சுங்க கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்தவர் தான் இந்த விவகாரத்தை வெளியுலகத்திற்கு எடுத்து வந்துள்ளார்.
போலி சுங்கச்சாவடியை அமைத்துக் கடந்த 1.5 ஆண்டுகளாக பல கோடி ரூபாயைக் கொள்ளையடித்ததாக அவர் சாடியுள்ளார். அங்கே செயல்பட்டு வந்த செராமிக் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி நெடுஞ்சாலையில் இருந்து போக்குவரத்தைத் திருப்பிவிட்டு, இந்த போலி சுங்கச்சாவடியை ஏற்படுத்தியுள்ளனர்.
குறைவு: இவர்களின் டோல் கட்டணம் வழக்கமான டோல் கட்டணத்தை விடக் குறைவாக இருந்ததால் யாரும் இது குறித்து புகார் தரவில்லை. அதாவது ஒரிஜினல் சுங்கக் கட்டணத்தைக் காட்டிலும் இது 50% குறைவாக இருந்துள்ளது. இதனால் லாரி ஓட்டுநர்கள், வழக்கமாக இந்த ரூட்டில் பயணிப்போர் இதே பாதையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் உண்மையில் இந்த நெடுஞ்சாலையை டெண்டர் எடுத்தவருக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இப்போது அந்த நபர் இது குறித்து புகார் அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக மோர்பி மாவட்ட ஆட்சியர் ஜிடி பாண்டியா கூறுகையில், "வர்காசியா பகுதியில் உள்ள உண்மையான டோல் கேட்டிற்கு செல்லும் வழியை மாற்றி, வாகனங்களை இந்த போலி டோல் கேட்டிற்கு திருப்பி விட்டுள்ளனர், இது தொடர்பாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்" என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்த செராமிக் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications