2 நாள் சாப்பாடே இல்லை! பசியால் உயிரிழந்த பிச்சைக்காரர்! ஆனா கையில் இருந்ததோ ஒரு லட்சம்! என்ன நடந்தது
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிச்சைக்காரர் ஒருவர் சாப்பிட உணவுக்கே வழியில்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. ஆனால், அவரிடம் கத்தை கத்தையாகப் பணம் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மிகவும் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்கே உணவு இல்லாமல் பசியால் பரிதவித்த நபர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இருப்பினும், அவரிடம் இருந்து ரூ.1.14 லட்சத்தை போலீஸ் மீட்டுள்ளனர்.

அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் இதுவரை உறுதியாகவில்லை, இருப்பினும், அவரது மரணம் அப்பகுதியில் உள்ள போலீசார் இடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குஜராத்: 50 வயதான அந்த நபர் வல்சாத் என்ற அந்த பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. உணவு இல்லாமல் அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக ரொம்பவே மோசமாகி இருக்கிறது. இதையடுத்து அவர் வல்சாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவரது மரணத்திற்குப் பசியே காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள போலீசார் கூறுகையில், "கடைக்காரர் ஒருவரிடம் இருந்துதான் எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. கடந்த இரண்டு நாட்களாகப் பிச்சைக்காரர் ஒருவர் காந்தி நூலகம் அருகே சாலையோரத்தில் ஒரே இடத்தில் படுத்துக் கிடப்பதாகச் சொன்னார்கள். மேலும், அந்த முதியவரின் உடல்நிலையும் ரொம்பவே மோசமடைந்து வருவதாக அந்த கடைக்காரர் தெரிவித்தார்" என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
உயிரிழப்பு: உடனடியாக மருத்துவர் பாவேஷ் படேல் அவரது குழுவுடன் அங்கே சென்றுள்ளார்.. அங்கே முதற்கட்ட பரிசோதனையில் அவரது உடல் மிகவும் பின், அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பாவேஷ் படேல் கூறுகையில், "அவருக்கு இந்தி தெரியவில்லை.. குஜராத்தி மொழி பேசினார். வல்சாத்தில் உள்ள தோபி தலாவ் பகுதியில் தங்கியிருப்பதாகக் கூறினார். இரண்டு நாட்களாக அவர் ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தார்.
ஒரு லட்ச ரூபாய்: நாங்கள் உடனடியாக அவரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது தான் அவரிடம் 1.14 லட்ச ரூபாய் பணம் இருந்ததை நாங்கள் கவனித்தோம். ரூ.500 நோட்டுகள் 38, 200 ரூபாய் நோட்டுகள் 83, 100 ரூபாய் நோட்டுகள் 537 இருந்தது.
மேலும், பல 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளும் அவரிடம் இருந்தது. இந்த நோட்டுகளை அவர் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி தனது ஸ்வெட்டர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்தார். அதையும் நாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம்" என்றார்.
அரசு மருத்துவமனை மருத்துவர் இது தொடர்பாகக் கூறுகையில், "அந்த முதியவர் மிக மோசமான நிலையில் தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வந்தவுடன் அவர் முதலில் எங்களிடம் தேநீர் கேட்டார். அவர் பசியுடன் இருப்பதையும் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். நாங்கள் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தோம். இருப்பினும், அவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். அவர் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்த நிலையில், அதுவே உயிரிழப்புக்குக் காரணம்" என்றார்.
யார் அவர்: உயிரிழந்த அந்த பிச்சைக்காரர் யார்.. அவரது பெயர், குடும்பம், அவர் எங்கே வசிக்கிறார் என எதுவும் உறுதி செய்யப்படவில்லை. பணத்தைக் கைப்பற்றியுள்ள போலீசார், அவரது குடும்பத்தினர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.டி.ஜித்தியா கூறுகையில், "அவரது போட்டோவை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். போட்டோவை பல வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பி இருக்கிறோம். இதுவரை அவர் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. அவர் பசியால் இறந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் ஒரு லட்சம் இருந்துள்ளது. இதனால் இது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications