மே.வங்கத்தில் காங்.-ல் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பதுதான் இலக்கு: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்த்து கட்சியை வலிமைப்படுத்துவதுதான் தமது முதல் இலக்கு என்று அம்மாநில காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. 2016 சட்டசபை தேர்தலில் 294 இடங்களில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. திரிணாமுல் மற்றும் பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்பது ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் நிலைப்பாடு.
இதனிடையே மேற்கு வங்க மாநில தலைவராக பொறுப்பேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமுல், பாஜகவுக்கு போன தலைவர்களை மீண்டும் காங்கிரஸில் இணைப்பேன். அவர்களுக்கான முழுமையான மரியாதை, உரிய அங்கீகாரம் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்படும் என்றார்.
மேலும் வரும் தேர்தலில் நிச்சயம் எங்களது வாக்கு வங்கியை அதிகரிப்போம். அதற்கான அத்தனை வியூகங்களையும் வகுத்துச் செயல்படுவோம் எனவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், இடதுசாரி வாக்குகள் பாஜகவுக்கு மடைமாறிப் போயிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
