7 முறை சம்மனை நிராகரித்த ஜார்க்கண்ட் சிஎம் ஹேமந்த் சோரன் - 10 இடங்களில் ரெய்டு-அமலாக்கத்துறை பதிலடி!
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த சம்மன், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டதாகவும் சட்டவிரோதமானது எனவும் கூறி இதனை ஏற்க மறுத்தார் ஹேமந்த் சோரன். தற்போது 7-வது முறையாகவும் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையும் ஏற்க முடியாது என்றார் ஹேமந்த் சோரன்.

மேலும் இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு ஹேமந்த் சோரன் ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், தமக்கு அனுப்பிய சம்மன்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை. தமது சொத்து விவரங்கள் அனைத்தும் தாக்கல் செய்யபட்டுவிட்டன. ஜார்க்கண்ட் மாநில அரசை சீர்குலைக்கவே அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த இடங்கள் அனைத்தும் ஹேமந்த் சோரனுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு சொந்த்மானவை.
#WATCH | Ranchi: ED raids are underway at Jharkhand CM Hemant Soren's press advisor's residence Abhishek Prasad alias Pintu in connection with an illegal mining case.
— ANI (@ANI) January 3, 2024
Searches are being carried out at 12 locations including Abhishek Prasad's residence and the residence of… pic.twitter.com/fRuJWQkxw8
இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தும் இடங்களில் ஒன்று முதல்வர் ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் வீடு, அலுவலகம். ஹாசரிபாக் நகர டிஎஸ்பி ராஜேந்திர துபேவின் வீடு, அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. சாஹிப்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் ராம் நிவாஸின் ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 14 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சனும் ஒருவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications