'இந்தியா' கூட்டணி பொள பொளக்குதா? 'சனாதன தர்மம்' பேச்சால் வம்பா? அக்.2 போபால் கூட்டம் திடீர் ரத்து!
போபால்: "இந்தியா" கூட்டணியின் அக்டோபர் 2 போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ம.பி. முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் அறிவித்துள்ளது அதில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"இந்தியா" கூட்டணியின் முதல் கட்டம் பாட்னா, 2-வது கூட்டம் பெங்களூர், 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின.

டெல்லியில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு, வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தின் முடிவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி பொதுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. ம.பி. சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. ம.பி. சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடையும் என்பது பொதுவான கருத்து கணிப்புகள் முடிவு.
கமல்நாத் திடீர் அறிவிப்பு: இந்நிலையில்தான் மத்திய பிரதேசம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி "இந்தியா" கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், அக்டோபர் 2-ந் தேதி பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சனாதனிகள் மீது தாக்குதல்: "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசினார். அவரது பேச்சை தற்போது வட இந்தியாவில் பாஜக தேர்தல் ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது. இன்று சனாதனத்தை ஒழிப்போம் என்பார்கள்; நாளை சனாதனத்தை பின்பற்றும் நம் மீது தாக்குதல் நடத்துவார்கள் என பிரதமர் மோடி உள்ளிட்டோர் விமர்சிக்கின்றனர்.
சோனியா, ராகுல் மும்பை சதி: சத்தீஸ்கரில் பேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, மும்பையில் நடைபெற்ற் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில்தான் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தை சோனியாவும் ராகுல் காந்தியும் தயாரித்தனர். அதனை இந்தியா கூட்டணி கட்சிகளிடம் கொடுத்தனர். அதனால்தான் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என பேசினார் என குற்றம்சாட்டினார்.
இந்தியா கூட்டணியில் அதிருப்தி: "இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களும் திமுகவின் சனாதன ஒழிப்பு நிலைப்பாட்டை ஏற்கவில்லை. காங்கிரஸின் கமல்நாத்தும், அனைத்து மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
என்ன காரணாம்?: இந்தப் பின்னணியில்தான் திடீரென '"இந்தியா" கூட்டணியின் ம.பி. போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு சர்ச்சை பூதாகரமாக்கப்பட்டதால் திமுக மீது "இந்தியா" கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதான் போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட காரணமாகவும் இருக்கலாம் என்கின்றன சில தகவல்கள். இருந்தபோதும் போபால் பொதுக் கூட்டம் ரத்து ஏன்? என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் விரைவில் வெளியாகும் என்பது எதிர்பார்ப்பு.
#WATCH | On being asked about the INDIA alliance rally in Madhya Pradesh, former CM and state Congress chief Kamal Nath says,"...The rally is not going to happen...It has been cancelled..." pic.twitter.com/mSxUEprMdW
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 16, 2023












Click it and Unblock the Notifications