தாவூத்தை 'போட்டுத் தள்ள' கராச்சிக்குள் புகுந்த இந்தியாவின் 'சூப்பர் பாய்ஸ்'! பரபரப்பு தகவல்கள்..
டெல்லி: இந்தியாவால் பல ஆண்டுகாலமாக தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை சுட்டுக் கொல்ல இந்திய கமாண்டோ படையினர் பாகிஸ்தானின் கராச்சிக்குள் ஊடுருவியிருந்ததாகவும் ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த திட்டத்தை கைவிடுமாறு இந்திய தரப்பில் இருந்து ஒரு போன் கால் சென்றதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎன்7 செய்தி சேனல் இதுகுறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமை 20 ஆண்டுகாலமாக இந்தியா தேடி வருகிறது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்திருந்தும் அந்த நாட்டு அரசு இந்தியாவுக்கு உதவ மறுத்துவந்தது.

இதனால் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பாக, இந்திய உளவு அமைப்பின் தகவல் அடிப்படையில் தாவூத் இப்ராஹிம் நடமாட்டத்தை பாதுகாப்பு துறை சேகரித்தது. கராச்சியில் கிளிப்டன் ரோட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து டிபென்ஸ் ஹவுசிங் சொசைட்டி என்ற இடத்துக்கு தினமும் தாவூத் காரில் செல்வது வழக்கம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே போகும் வழியில் தர்க்கா ஒன்றின் அருகே வைத்து தாவூத்தை சுட்டுக் கொல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம்தேதி தாவூத்தை கொல்ல நாள் குறிக்கப்பட்டது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் உதவியும் இந்த திட்டத்திற்காக கோரப்பட்டது. இதையடுத்து இந்திய கமாண்டோ வீரர்கள் 9 பேர் தாவூத்தை கொல்ல தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 'சூப்பர் பாய்ஸ்' என்று பெயரிடப்பட்டு சூடான், வங்கதேசம் மற்றும் நேபாள நாட்டு போலி பாஸ்போர்டுகள் வாங்கித்தரப்பட்டன. அதன் மூலம் கமாண்டோக்கள் 9 பேரும் கராச்சிக்குள் ஊடுருவினர்.
தாவூத்தை கொல்ல வேண்டிய நேரம் நெருங்கிய நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு போன் அழைப்பு கமாண்டோக்களுக்கு சென்றது. தாவூத்தை கொல்ல வேண்டாம் என்று அந்த அழைப்பில் பேசியவர் கட்டளை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து கடைசி சில நிமிடங்களில் திட்டம் கைவிடப்பட்டது. போனில் தொடர்பு கொண்டது யார்? எதற்காக தாவூத்தை கொல்லாமல் விடச் சொன்னார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை.
இவ்வாறு அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications