பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்பரப்பில் தடை-கப்பல்கள் நுழைய முடியாது-மத்திய அரசு மாஸ் மரண அடி!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிதீவிரப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்தவும் பாகிஸ்தானின் அனைத்துவிதமான கப்பல்கள் இந்திய துறைமுகங்களில் நுழையவும் தடை விதிப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட இருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு அப்பாவி 26 சுற்றுலா பயணிகளை படுகொலை செய்தது பாகிஸ்தான். பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளும் கை கோர்த்து நடத்திய இந்த கொலைவெறியாட்டத்தால் இந்திய மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

இந்தியர்களின் கோபத்தைக் காட்டும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வாழ்வாதாரமான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டது மத்திய அரசு; சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு திறப்பதையும் நிறுத்தியது மத்திய அரசு.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்களது வான்பரப்பில் நுழைய தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்கும் சிம்லா ஒப்பந்தத்தைக் கைவிடுவதாகவும் பாகிஸ்தான் கொக்கரித்தது.
இதனிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என குலைநடுங்கிப் போய் கிடக்கிறது அந்த நாடு. இதனால் எல்லையில் ஆத்திரமூட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதற்கு நமது ராணுவத்தினரும் பதிலடி தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் விமானங்கள், இந்திய வான்பரப்பில் நுழையவும் பாகிஸ்தானின் கப்பல்கள், இந்திய துறைமுகங்களில் நுழையவும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications