குஜராத் தேர்தல்: பாஜகவில் மனைவி போட்டி.. பிரதமர் மோடி-அமித்ஷாவை புகழ்ந்த ஜடேஜா.. என்ன சொன்னார்?
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஜெய்ஹிந்த் எனக்கூறி மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த ரவீந்திர ஜடேஜா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
தற்போதைய சூழலில் குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிடுகின்றன.மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத்துக்கு 2 கட்டமாக தேர்தல்
மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1ம் தேதியும், 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நேற்று பாஜக சார்பில் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்னும் 22 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாக வேண்டி உள்ளது.

ஜடேஜாவின் மனைவி போட்டி
இதில் இந்திய கிரிக்கெட் வீரரான ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரிவாபா 2019ல் அதாவது 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் சிட்டிங் பாஜக எம்எல்ஏவாக தர்மேந்திரசிங் எம் ஜடேஜா இருந்த நிலையில் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது.

படித்தது என்ஜினீயரிங்
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை படித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிசிங் சோலங்கியின் உறவினராவார். இவர் கடந்த 2016ல் ரவீந்திர ஜடேஜாவை கரம் பிடித்தார். ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த இவர் ஜாம் நகர் சவுராஷ்டிரா பகுதியில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். இந்நிலையில் தான் 2019 ல் பாஜகவில் இணைந்தார். சட்டசபை தேர்தலையொட்டி கடந்த சில மாதங்களாக ரிவாபா தீவிர அரசியலில் இறங்கினார். பல கிராமங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வந்த நிலையில் இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனைவிக்கு ஜடேஜா வாழ்த்து
இந்நிலையில் தான் மனைவி ரிவாபாவுக்கும் கணவராக ரவீந்திர ஜடேஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி ரிவாபாவின் படத்தை பதிவிட்டு, ‛‛சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் டிக்கெட் பெற்றுள்ள எனது மனைவிக்கு வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சியை நினைத்து பெருமைப்படுகிறேன். சமுதாய பணிக்காக உங்களின் கடின உழைப்பு தொடரட்டும்'' என கூறியுள்ளார்.

மோடி-அமித்ஷாவுக்கு நன்றி
மேலும் அதேபதிவில், மனைவி ரிவாபாவுக்கு வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கும் ரவீந்திர ஜடேஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛என் மனைவி மீது நம்பிக்கை வைத்து உன்னதமான பணி செய்ய வாய்ப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸில் ஜடேஜாவின் சகோதரி போட்டி?
இதன்மூலம் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவுக்கு போட்டியிடுவது உறுதியாகி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் அவரை எதிர்த்து ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நயினாவை களமிறக்க காங்கிரஸ் பரிசீலனை செய்து வருகிறது. நயினா ஜாம்நகர் பகுதி மக்களுக்கு மிகவும் பரீட்சயமானவர். இவர் 2019ல் பாஜகவில் ரிவாபா சேர்ந்த பிறகே காங்கிரஸில் இணைந்த நிலையில் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். இதனால் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபாவை எதிர்த்து ஜடேஜாவின் சகோதரி நயினா களமிறங்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications