ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. களமிறங்கிய தூதரக அதிகாரிகள்! பாகிஸ்தானின் போலி பிரசாரத்துக்கு மோடி செக்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் நிலையில், இதற்கு செக் வைக்கும் விதமாக பிரதமர் மோடி முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். அதன்படி சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை பார்வையிட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 வெளிநாட்டு தூதரகங்களை சேர்ந்த தூதரக அதிகாரிகள் குழு இன்று ஸ்ரீநகர் வருகிறது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் நடக்கும் வாக்குப்பதிவு என்பதால், இந்த சட்டப்பேரவை தேர்தல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 61.11% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 25.78 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தோ்தலுக்காக, 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி என பல முக்கிய தலைகள் களமிறங்குகின்றன.
ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் புட்காம், ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நேற்று முன்தினத்துடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இப்படி இருக்கையில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வருகின்றன. இந்த கருத்து பிரசாரத்தை முறியடிக்குவும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
அதாவது, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை பார்வையிட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 வெளிநாட்டு தூதரகங்களை சேர்ந்த தூதரக அதிகாரிகள் குழு இன்று ஸ்ரீநகர் வருகிறது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை மத்திய அரசு அழைத்திருக்கிறது.
ஏற்கெனவே முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலும் அமைதியாக நடைபெறும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில் சர்வதேச நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு இந்த தேர்ததலை பார்வையிட்டு, எந்த பிரச்னையும் இல்லை என்று கூறிவிட்டால், அது பாகிஸ்தானின் மடைமாற்ற கருத்து பிரசாரத்திற்கு செக் வைத்ததை போல அமைந்துவிடும். எனவேதான் இந்த நடவடிக்கை பிரதமர் மேற்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications