போச்சே! விதிகளை மீறிய ஜடேஜாவின் மனைவி? குறுக்கே வந்த மாப்பிள்ளை வீடு! குஜராத் தேர்தலில் ட்விஸ்ட்
காந்திநகர்: குஜராத்தில் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தினார் என்று ஜடேஜாவின் சகோதரி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே குஜராத் தேர்தல் கலத்தில் பரபரப்பான சூழலில் நிலவி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் அதனை மேலும் அதிகரித்துள்ளன.
கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் கோலோச்சி வரும் பாஜக இந்த முறையும் எப்படியாவது வெற்றி கொடி நாட்டிவிட வேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கையில் தற்போது ஜடேஜாவின் மனைவிக்கு எதிராக அவரின் சகோதரியே களத்தில் இறங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிவாபா
குஜராத்தின் மிக முக்கிய தொகுதிகளில் ஒன்று ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியை கடந்த 2012ம் ஆண்டு காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால் அதன் பின்னர் நடந்த 2017ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக தனது பலத்தை நிரூபித்து வெற்றி பெற்றது. இவ்வாறு இருக்கையில், இந்த முறையும் தொகுதியை கைவசமே வைத்திருக்க வேண்டும் என்று கிரிக்கெட் விளையாட்டு வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவை பாஜக களம் இறக்கியுள்ளது. ஆனால் இதில் சோகம் என்னவெனில் ரவிந்திர ஜடேஜாவின் சகோதரியான நைனாபா காங்கிரசுக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என்பதுதான்.

குற்றச்சாட்டு
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரண்டு பிராதான கட்சிகளில் இணைந்து பிரசாரம் மேற்கொண்டிருப்பதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டது முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜடேஜாவின் சகோதரியான நைனாபா, பாஜக வேட்பாளரான ரிவாபா மீது வைத்து வந்திருந்தார். இந்நிலையில் தற்போது மற்றுமொரு குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார். அதாவது தேர்தல் பரப்புரையில் ரிவாபா சிறார்களை ஈடுபடுத்துகிறார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. இதன் மூலம் ரிவாபா குழந்தை தொழிலாளர்களை ஆதரிக்கிறார் என்றும் நைனாபா விமர்சித்துள்ளார்.

குழந்தைகள்
மேலும், "தினமும் பிரசாரத்திற்கு செல்லும் ரிவாபா உடன் சிறார்களை அழைத்துச் செல்கிறார். அவர்களுக்கு கிரிக்கெட் டி-சர்டுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறுவர்களில் பலர் 10 வயதுக்கு குறைவானவர்களாவார்கள். இது குழந்தை தொழிலாளர் முறை என்பது தெளிவாக தெரிகிறது. இது குறித்து எங்கள் தரப்பிலிருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரிவாபா, "இது எங்கள் குடும்ப பிரச்னை அல்ல. அவர் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர். அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல" என்று கூறியுள்ளார்.

தொகுதி நிலவரம்
ஜாம்நகர் தொகுதியை பொறுத்த அளவில் இங்கு மொத்தம் 3,40,277 மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் நகர்ப்புற மக்களாவார்கள். இந்த ஆண்டு வெளியான வாக்காளர் பட்டியலின்படி இந்த தொகுதியில் மொத்தம் 2,57,287 வாக்காளர்கள் இருக்கின்றனர். 228 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. 2017 சட்டமன்றத் தேர்தலில் 65.5% வாக்குகளும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் 63.58% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 58.95% வாக்குகளையும் காங்கிரஸ் 30.31% வாக்குகளையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications