ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு வெற்றிகரமான தோல்வி.. காங்கிரஸ் தோல்விகரமான வெற்றி.. காரணம் என்ன?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. பல்வேறு வியூகங்களை வகுத்த பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜக ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது.

முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது. பாஜக தனித்து களமிறங்கியது. அதேபோல முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கினர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.
எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. அதேபோல தான் தேர்தல் முடிவுகளும் அமைந்தன. தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக இதுவரை ஜம்மு காஷ்மீரில் தனித்து வெற்றி பெற்றது இல்லை. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
அதேநேரத்தில் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 18% வாக்குடன் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கு 38 தொகுதிகளில் போட்டியிட்டது.
அதில் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் வாக்கு 12% ஆக குறைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் தோல்வியை சந்தித்தாலும், ஜம்மு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.
அங்கு பாஜக போட்டியிட்ட 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சிக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் வாக்கு சதவீத அடிப்படையில் மொத்தமாக பாஜக 25%, தேசிய மாநாடு கட்சி 23% பெற்றுள்ளன. இதுதவிர கவர்னர் நியமன எம்எல்ஏக்கள் 5 பேரும் பாஜக ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது












Click it and Unblock the Notifications