ஆட்சி தான் கிடைக்கலை.. ஜம்மு காஷ்மீரில் பாஜக வளர்ந்துள்ளதா? இல்லையா? இந்த டேட்டாவை பாருங்க!
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வந்தது. ஆனால் இன்றைய தேர்தல் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. சரி இது இருக்கட்டும்.. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேசமாக்கி உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்த பாஜக தனித்து 29 தொகுதிகளில் வென்ற நிலையில் இந்த தேர்தல் அந்த கட்சிக்கு வளர்ச்சியை கொடுத்துள்ளதா? வீழ்ச்சியை தந்துள்ளதாக என்பது பற்றி டேட்டாவுடன் இங்கு பார்ப்போம்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான ரிசல்ட் முழுவதும் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ‛இந்தியா' கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

‛இந்தியா' கூட்டணியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும். மேலுமு் இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். .
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சிகளுடன் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 49 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதிகபட்சமாக தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்தது. ஆனால் பாஜகவின் முயற்சி கைக்கொடுக்கவில்லை. இதனால் பாஜக மொத்தம் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரும் கட்சியாக ஜம்மு காஷ்மீரில் மாறி உள்ளது. அதோடு எதிர்க்கட்சியாக சட்டசபையில் செயல்பட உள்ளது. அதேபோல் தனித்து களம் கண்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) கட்சி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து, யூனியன் பிரதேசமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பாஜக நம்பியது. ஆனால் இன்றைய தேர்தல் முடிவு என்பது பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. இத்தகைய சூழலில் தான் ஜம்மு காஷ்மீரில் பாஜக வளர்ந்துள்ளதா? வீழ்ந்துள்ளதா? என்பது தொடர்பான டேட்டா வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் ஜம்மு காஷ்மீரில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது தெளிவாக புரிகிறது.
அதாவது கடந்த 2014ல் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. அப்போது ஜம்மு காஷ்மீருக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவின் கூட்டணி ஆட்சி ஜம்மு காஷ்மீரில் இருந்தது. அதாவது மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களில் வென்றது. இதையடுத்து இருகட்சிகளும் கூட்டணி அமைத்த ஆட்சியை பிடித்தன. மெகபூபா முப்தி முதல்வராக செயல்பட்டார். அப்படி பார்த்தால் இது பாஜகவுக்கு நஷ்டம்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தை தாண்டி பாஜக கட்சி என்ற வகையில் பார்த்தால் ஜம்மு காஷ்மீருக்கு ‛தாமரை' சின்னத்துக்கான வாக்காளர்கள் அதிகரித்துள்ளது தெரியவரும். கடந்த முறை பாஜக 25 இடங்களில் வென்றது. அப்போது பாஜக வாங்கிய ஓட்டு சதவீதம் என்பது 22.98 சதவீதமாகும். அதேபோல் இன்று வெளியான தேர்தல் முடிவில் தனிக்கட்சியாக பாஜகவுக்கு தான் அதிக ஓட்டு கிடைத்துள்ளது. 29 தொகுதிகளில் வென்ற பாஜக 25.64 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இது கடந்த முறையை ஒப்பிடும்போது இரண்டரை சதவீதம் அதிகமாகும்.
அதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் 42 தொகுதிகளை வென்ற தேசிய மாநாட்டு கட்சியின் ஓட்டு சதவீதம் கூட பாஜகவை விட குறைாக தான் உள்ளது. அந்த கட்சி மொத்தம் 23.43 சதவீத ஓட்டை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மொத்தம் 11.91 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. அந்த வகையில் பார்த்தால் பாஜக கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டரை சதவீத ஓட்டுகளை அதிகம் பெற்றுள்ளது. இது பாஜகவின் வளர்ச்சியை காட்டும் வகையில் உள்ளது.












Click it and Unblock the Notifications