ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வந்த அந்த நாள்... கோர்ட்டுக்குள் நடந்த நிகழ்வுகள்.. அப்படியே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிறை தண்டனை, அபராதத்தை எதிர்த்து வரும் 18ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி.. ஜெயலலிதா என்றுமே மறக்க முடியாத நாள். அவரது அரசியல் வரலாற்றை தலைகீழாக திருப்பிப் போட்ட தினம். அன்றுதான் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அவரை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவித்து 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Jaya verdict: First person account of what transpired inside the court

இந்தத் தீர்ப்பின் மூலம் அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. மேலும் அவரது முதல்வர் பதவியும் உடனடியாக பறிபோனது. எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது.

தீர்ப்பை அறிய கனத்த, படபடத்த இதயத்துடன் கோர்ட்டுக்கு வெளியே காத்திருந்தனர். அவரது ஆதரவாளர்கள் மிகுந்த படபடப்புடன் காணப்பட்டனர். ஆனால் அவருக்கு வந்த இந்த தீர்ப்பை யாரும எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ஜெயலலிதாவின் கட்சியினரும், ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தீர்ப்பு சொல்லப்பட்ட சமயத்தில் கோர்ட் அறைக்குள் நடந்த சம்பவங்கள் ஒரு மிகப் பெரிய திரில்லர் படம் போல இருந்தது ஒரு கட்டத்தில் கோர்ட்டுக்குள் இருந்தவர்களுக்கு ஜெயலலிதா மீது மிகுந்த பரிவும், பரிதாபமும் கூட ஏற்பட்டது காரணம், தீர்ப்பை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வாசிக்க வாசிக்க ஜெயலலிதாவிடம் காணப்பட்ட மாற்றங்கள்.

கோர்ட் அறையில் அந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகள் இங்கே...

ஜெயலலிதா வரும்போது எழுந்து நிற்க தடை:

முற்பகல் 11 மணிக்கு கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கவிருந்தன. அதற்கு முன்பு அங்கு வந்த கோர்ட் அதிகாரி, அதிமுக ஆதரவாளர்கள், வக்கீல்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். நீதிபதி வரும்போது மட்டும்தான் எழுந்திருக்க வேண்டும். வேறு யார் வந்தாலும் எழுந்திருக்கக் கூடாது. குறிப்பாக ஜெயலலிதா வரும்போது எழுந்திருக்கக் கூடாது. நீதிபதிதான் உயர்ந்தவர். எனவே நீதிபதி வரும்போது மட்டுமே எழுந்து நிற்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆனால் அதிமுகவினர் மகா புத்திசாலிகள். உட்கார்ந்தால்தானே எழுந்திருக்க முடியாது. எனவே அவர்கள் உட்காரவே இல்லை. ஜெயலலிதா கோர்ட் அறைக்குள் வரும் வரை அவர்கள் அமராமல் நின்றபடியே இருந்தனர்.

11 மணி..நம்பிக்கையுடன் காணப்பட்ட ஜெ.:

ஜெயலலிதா சரியாக முற்பகல் 11 மணிக்கு கோர்ட் அறைக்குள் நுழைந்தார். வழக்கமான நம்பிக்கையுடன் அவரது முகம் காணப்பட்டது. மேலும் கோர்ட் அறையில் குழுமியிருந்த அதிமுகவினர் மத்தியிலும் கூட நம்பிக்கை காணப்பட்டது. யாரிடமும் பதட்டம் இல்லை. ஒரு கட்டத்தில் தான் விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையும் ஜெயலலிதாவிடம் காணப்பட்டது.

அவரது வக்கீல்களும் கூட நம்பிக்கையுடன் காணப்பட்டனர். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று அவர்கள் ஜெயலலிதாவிடமும் கூறியதைப் பார்க்க முடிந்தது. அவரும் வக்கீல்களை வாழ்த்தினார்.

எல்லாமே தலைகீழ்:

ஆனால் திடீரென எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. அவரது நம்பிக்கைக்கு மிகக் குறுகிய ஆயுள் காலமே இருந்தது. நீதிபதி நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்து விட்டார். உடனடியாக அவர் முக்கியப் பகுதிக்கு வந்தார். 11.10 மணிக்கெல்லாம் அவர் முக்கிய விஷயத்தைத் தொட்டு விட்டார். ஜெயலிலதா உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து உள்ளதாக தெரிவித்த அவர் நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று கூறியபோது நால்வரும் அதிர்ந்து போயினர்.

நான்கு பேரிடமும் நிலவிய அந்த நம்பிக்கை 10 நிமிடங்களில் தகர்ந்து போனது. நம்பிக்கை பொதிந்த முகத்துடன் காணப்பட்ட ஜெயலலிதா வெறித்த பார்வையுடன் நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் சசிகலாவைப் பார்த்தார். ஆனால் எதுவும் பேசவில்லை. அவரது முகத்தில் அதிர்ச்சியும், ஏமாற்றமும் தெறிந்ததை உணர முடிந்தது.

ஜெயலலிதாவிடம் செல்லவே அஞ்சினர்

நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்த பின்னர் 1 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் நீதிபதி அறிவித்து விட்டு வெளியேறினார். நீதிமன்றம் ஒரு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த அதிமுக வக்கீல்கள் ஜெயலலிதாவிடம் செல்லவே அஞ்சினர்.

உறைந்து போன விவாதம்:

பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கோர்ட் ஹாலுக்குள் ஜெயலலிதா வந்தார். அப்போது அவரிடம் நீதிபதி, ஏன் உங்களை கடுமையாக தண்டிக்கக் கூடாது என்று கேட்டார். இதையடுத்து ஜெயலலிதா நீண்டதொரு விளக்கத்தை அளித்தார். தனது ஆட்சி குறித்தும், தான் செய்த மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விவரித்தார். தனது நிர்வாகம் தமிழகத்திற்கு முக்கியமானது என்று விளக்கினார். இருப்பினும் அவரது விளக்கம் நீதிபதியைக் கவரவில்லை. ஜெயலலிதாவின் வக்கீல்களும் அவருக்கு ஆதரவாக பல வாதங்களை முன்வைத்தனர்.

ஜெயலலிதாவைப் போலவே அவர்களும் வாதத்தை எடுத்து வைத்ததால் அது பலன் தராமல் போய் விட்டது. இதையடுத்து மாலை 4 மணிக்கு தண்டனை விவரத்தை தெரிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஜெயலலிதா அதிர்ச்சி

மாலை 4 மணிக்கு நீதிபதி தண்டனை விவரத்தைப் படித்தார். நீதிபதி தண்டனை விவரத்தைச் சொன்னபோது ஜெயலலிதா உள்ளிட்டோர் எழுந்து நின்று அதைக் கேட்டனர். அப்போது ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி அபராதமும் விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

அதைக் கேட்டதும் ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். அவரது முகத்தில் நம்ப முடியாத ஒரு பார்வை தெரிந்தது. தான் அமர்ந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிபதியிடம் அனுமதி கேட்டார் ஜெயலலிதா. இதையடுத்து ஜெயலலிதாவிடம் வேகமாக நெருங்கிச் சென்றார் சசிகலா நடராஜன். அவருக்கு ஆறுதலாக பேசி அருகேயே நின்றிருந்தார் சசிகலா.

அதன் பின்னர் அனைவரும் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக கைது வார்ண்ட் பிறப்பித்தார் நீதிபதி. அதன் பின்னர் ஜெயலலிதா யாருடனும் பேசவில்லை. வக்கீல்களுடனும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் தனது காரை நோக்கிச் சென்றார். ஆனால் இதற்கு போலீஸார் ஆட்சேபனை தெரிவித்தனர். இருப்பினும் அவரின் வக்கீல்கள் நீதிபதியிடம் அனுதி வாங்கி வந்ததால், அவரது காரில் பயணம் செய்ய போலீஸார் அனுமதித்தனர்.

அதன் பின்னர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+