ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு மீதான விசாரணை மார்ச் 15-க்கு ஒத்திவைப்பு- ஆஜராகிறார் ஆச்சார்யா!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டதால் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா. இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 2-ந் தேதி தொடங்க இருந்தது. ஆனால் இதை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடர்பான வழக்கை விசாரிப்பதால் ஜெயலலிதா தரப்பு வழக்கை ஒத்திவைக்க கோரியது. இதை ஏற்று பிப்ரவரி 23-ந் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பிப்ரவரி 23-ந் தேதியன்றும் ஜெயலலிதா தரப்பு மேலும் ஒரு வார காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியது. ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் இதனை நிராகரித்து கர்நாடகா அரசு தரப்பு தம்முடைய இறுதிவாதத்தை முன்வைக்க அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தமது இறுதிவாதங்களை முன்வைத்தார். அவர் 2-வது நாள் வாதத்தை நிறைவு செய்த போது, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 10-ந் தேதி(இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மூத்த வழக்கறிஞர் தவே தம்முடைய இறுதிவாதத்தை நிறைவு செய்தார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை வரும் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்களுக்கு எதிரான வாதத்தை கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா முன்வைக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications