ஜார்க்கண்ட் தேர்தல்.. ஒரு வழியாக முடிஞ்சுது இழுபறி! இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
ராஞ்சி: 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக நிறைவு பெறுகிறது. இதனால், அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 20 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு இடையேயும் - பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமை வகிக்கிறது. காங்கிரஸ், ஆர்ஜேடி, இடது சாரிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜேபி, ஏஜே எஸ் யூ ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் பாஜக 68 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், ஏஜே எஸ் யூ கட்சி 10 இடங்களிலும் எல்.ஜே.பி (ஆர்) ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
பாஜக தொகுதி பங்கீட்டை முடித்துள்ள நிலையில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று தொகுதி பங்கீட்டை இந்தியா கூட்டணி கட்சிகள் நிறைவு செய்துள்ளன. இதன்படி, ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ராஷ்டிரிய ஜனதா தளம், இடது சாரிகள் கட்சிகளுக்கு 11 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹேமந்த் சோரன், "தொகுதி பங்கீட்டில் முழு விவரங்களுக்குள் நாங்கள் இப்போது செல்ல வில்லை. எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் தற்போது இல்லை. அவர்கள் வரும் போது எத்தனை சீட்கள்? எந்த கட்சி? என்பது இறுதி செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications