ரத்த மாற்று சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு! அரசு மருத்துவமனையில் அலட்சியம்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற அப்பாவி குழந்தைகள் 5 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற அந்தக் குழந்தைகளுக்கு எப்படி இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறியத் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் அங்கு மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் அரசு மருத்துவமனையை நம்பியே ஏழை மக்கள் இருக்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை என்றாலும் அவர்கள் அரசு மருத்துவமனையையே நாடுகிறார்கள். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மக்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கிறது என்ற போதிலும், சில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் அலட்சியங்கள் காட்டப்படுகிறது.

ஷாக் சம்பவம்
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது அரங்கேறியுள்ளது... ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐந்து குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனையில் அவர்களுக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்தே குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.
கைபாசாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. ஏழு வயதான அந்தக் குழந்தைக்கு தலாசீமியா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அக்குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இந்தச் சம்பவம் அங்கு மாநிலம் முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க ராஞ்சியிலிருந்து ஒரு விசாரணைக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
குற்றச்சாட்டு
தலாசீமியா நோயால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தையின் குடும்பத்தினர், கைபாசா சதர் மருத்துவமனையின் ரத்த வங்கியில் எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாகக் கடந்த வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினர். இந்தப் புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் குழு அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையிலேயே அங்குப் பல அதிர்ச்சி சம்பவங்கள் தெரிய வந்தது. நேற்று சனிக்கிழமை நடத்திய ஆய்வில், தலாசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது. இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது
இது தொடர்பாக மருத்துவர் தினேஷ் கூறுகையில், "தலாசீமியா நோயாளிகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின்போது ரத்த வங்கியிலும் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றைச் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
ரத்த வங்கியில் ரத்த மாதிரி பரிசோதனை, பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் என பல விஷயங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இது குறித்து மாநில சுகாதாரத் துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து இந்தத் தொற்று எப்படிப் பரவியது என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் சுஷாந்தோ குமார் மஜீ தெரிவித்தார்.
வேறு காரணங்கள் இருக்கலாம்!
அதேநேரம் தற்போதைய சூழலில், ரத்த மாற்றுச் சிகிச்சை காரணமாகவே இந்தக் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டது என்று முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது என்றும், அசுத்தமான ஊசிகள் உள்ளிட்ட பிற காரணங்களாலும் எச்ஐவி தொற்று ஏற்படலாம் என்றும் மஜீ குறிப்பிட்டார். இப்போது மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 515 எச்ஐவி நோயாளிகளும், 56 தலாசீமியா நோயாளிகளும் உள்ளனர். இதனால் அந்தக் குழந்தைகளுக்கு யாருடைய ரத்தம் செலுத்தப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அவர்களிடம் எச்ஐவி தொற்று சோதனையை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து ரத்த வங்கியில் எமர்ஜென்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரத்தம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications