குஜராத் உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.கவை பதம்பார்த்த படேல்கள்... காங்கிரஸ் பேரெழுச்சி!!
அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நகர்ப்புறங்களில் பா.ஜ.க.வால் வெல்ல முடிந்தது. ஆனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி பெரும் உற்சாகத்துடன் இருக்கிறது. பா.ஜ.கவின் பின்னடைவுக்கும் காங்கிரஸின் பேரெழுச்சிக்கும் காரணமே இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம்தான்.
குஜராத்தின் முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலம் காலமாக பா.ஜ.க. ஆதரவாளர்களான இந்த படேல்களின் போராட்டத்தை ஆளும் பா.ஜ.க. அரசு ஒடுக்கியது. படேல்களின் தலைவரான ஹர்திக் படேல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது. இதனால் பா.ஜ.க. மீது கடும் கோபத்தில் படேல் சமூகத்தினர் உள்ளனர்.

இதற்கு அஞ்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தியது பா.ஜ.க. அரசு.ஆனால் குஜராத் உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நகரங்களில் மாநகராட்சிகளைத் தான் பா.ஜ.க.வால் கைப்பற்ற முடிந்தது. அதுவும் சாதாரணமாக கைப்பற்றிவிட முடியவில்லை. காங்கிரஸின் பெரும்பாலான இடங்களில் மல்லுக்கட்டித்தான் 6 மாநகராட்சிகளையும் வெல்ல முடிந்தது பா.ஜ.கவினால்...
231 தாலுகா பஞ்சாயத்துகளில் 132ஐ காங்கிரஸ் கைப்பற்ற பா.ஜ.க.வால் 73 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது.
அதேபோல் 31 மாவட்ட பஞ்சாயத்துகளில் 21ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸின் இந்த அதிரடி வெற்றிக்கு காரணமே படேல்களின் ஒட்டுமொத்த ஆதரவும்தான்.
2010ஆம் ஆண்டு படேல்களின் ஆதரவு பா.ஜ.க. 208 தாலுகா பஞ்சாயத்துகளில் 162ஐ கைப்பற்றியிருந்தது. 53 நகராட்சிகளில் 41, மாவட்ட பஞ்சாயத்துகளில் 24-ல் 21ஐ கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications