ராம் ரஹிமை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் படுகொலை.. நீதிக்காக காத்திருக்கும் மகன்!
தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் பற்றி அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ராம் சந்தர் சத்ரபதியின் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சண்டிகார்: தேராவில் பாலியல் பலாத்காரங்கள் நடந்ததை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் கொல்லப்பட்ட வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது.
ஆசிரமத்திற்கு வந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்து ராம்ரஹீமின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீமிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை வரும் திங்கள் கிழமை கோர்ட்டு அறிவிக்கிறது. இந்நிலையில் குர்மீத் ராமிற்கு எதிரான மற்றொரு வழக்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர்
சிர்சாவில் அமைந்துள்ள தேரா தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்தார் பத்திரிக்கையாளர் ராம் சந்தர் சத்ரபதி. தான் நடத்தி வந்த உள்ளூர் பத்திரிக்கையான பூரா சச்சாவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து முன்னாள் சாத்வி எழுதிய 3 பக்க கடிதத்தை அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பஞ்சாப் மாநில தலைமை நீதிபதி ஹரியானா உயர்நீதிமன்றம் உள்ளிட்டோருக்கு அனுப்பியிருந்தார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சத்ரபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

தொடக்கப்புள்ளி
ராம் சந்தர் சத்ரபதி இணைத்து அனுப்பியிருந்த அந்தக் கடிதத்தில் புனிதப்படுத்துகிறேன் என்ற பெயரில் ராம்ரஹீம் பெண் பக்தர்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக கூறுப்பட்டிருந்தது. இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

துப்பாக்கிச் சூடு
குர்மீத் ராம் ரஹீமிற்கு எதிரான ஆதாரமாக இது கருதப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் ராம் சந்தர் சத்ரபதி அக்டோபர் மாதம் 24ம் தேதி 2002ம் ஆண்டு அவருடைய வீட்டில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் குறித்து அவருடைய மகன் அன்சுல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மகன் புகார்
இந்த வழக்கு குறித்து ராம் சந்தர் சத்ரபதியின் மகன் அன்சுல் கூறியதாவது"என்னுடைய தந்தை கொல்லப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது, அப்போது எனக்கு 21 வயது இருக்கும் யாரிடம் புகார் கொடுப்பது என்ன செய்வது என்று எதுவும் தெரியவில்லை. போலீசார் முதலில் சாமியார் ராம் ரஹீம் பெயரை முதல் தகவல் அறிக்கையில் கூட சேர்க்க மறுத்துவிட்டனர்."

விசாரணை
"துப்பாக்கி சூட்டை அடுத்து என்னுடைய தந்தையார் சுமார் 28 நாட்கள் மருத்துவமனையில் போராடி வந்தார், அவருடைய உடலில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் எடுக்கப்பட்டது. உள்ளூர் போலீசில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தேரா தலைவரையே குற்றவாளியாக கூறினார். கடும் சட்டப் போராட்டங்களுக்குப்பின்னர் 2003 ஜனவரியில் ஹைகோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது" என்கிறார்.

தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து ராம் ரஹீம் மீது கற்பழிப்பு, கிரிமினல் குற்றம், பெண்களை இழிவாக நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. பத்திரிக்கையாளர் சத்ரபதியின் படுகொலைக்கு பின்னர் அவர் நடத்திவந்த உள்ளூர் இந்தி செய்தி பத்திரிக்கையை நடத்த அன்சுல் பெரும் போராட்டத்தை எதிர்க்கொண்டு உள்ளார், தொடர்ச்சியான மிரட்டல் மற்றும் அழுத்தத்திற்கு இடையே பயணித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications