2 நாள் லீவு கேட்ட பவானி சிங்... ‘நோ நோ’ சொன்ன நீதிபதி குமாரசாமி !
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடி வரும் பவானி சிங்கின் இரண்டு நாள் விடுமுறை கோரிக்கையை நீதிபதி குமாரசாமி நிராகரித்து விட்டார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி முன் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் வாதாடி வருகிறார்.

வழக்கு விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை, கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒருவழி செய்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதா வழக்கின் அடிப்படைத் தன்மை என்ன என்பதாவது தெரியுமா என பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி.
நேற்று நடந்த விசாரணையின்போது, வழக்கு விசாரணை அதிகாரி நல்லம நாயுடு அளித்த சாட்சியத்தை, அப்படியே பவானி சிங் வாசித்தார். அதற்கு, 'சொத்துகள் குறித்த விவரம் வேண்டும்' என்பது உள்ளிட்ட சில கேள்விகளை, நீதிபதி எழுப்ப அதற்கு பதிலளிக்க முடியாமல் பவானி சிங் திணறினார்.
பின்னர், தனக்கு 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என பவானி சிங் கோரிக்கை விடுத்தார். ஆனால், 'இரண்டு நாள் விடுமுறை கொடுக்க முடியாது. நாளை, முன்னாள் போலீஸ் அதிகாரிகள் லத்திகா சரண், பெருமாள், கதிரேசன் ஆகியோர் சாட்சியத்தை படிக்க வேண்டும்; விசாரணை, நாளையும் தொடரும்' என நீதிபதி கறாராக தெரிவித்து விட்டார்.












Click it and Unblock the Notifications