ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பு வாதம் எழுத்துப்பூர்வமாக தாக்கல்
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தம்முடைய இறுதிவாதத்தை எழுத்துப்பூர்வமாக கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 1-ந்தேதியன்று நிறைவு பெற்றது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், மீடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், லெக்ஸ் பிராபர்ட்டி டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா என்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களை விடுவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் அந்த பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த 6 நிறுவனங்களை விடுவித்ததற்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா மற்றும் நிறுவனங்கள் தரப்பில் ஹரின் பி.ராவல் ஆகியோர் தங்கள் இறுதி வாதங்களை கடந்த 7-ந் தேதி நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இரு தரப்பும் தங்கள் சுருக்கமான வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதன்படி நேற்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் சுருக்கமான வாதம் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் இதை தாக்கல் செய்தார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து வாதங்களும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications