பவானி சிங்கை மாற்றக் கோரிய அன்பழகன் வழக்கு: கர்நாடக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரான பவானி சிங்கை மாற்றக் கோரிய வழக்கில், கர்நாடக தலைமைச் செயலருக்கும், பவானி சிங் மற்றும் சட்ட செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக்கோரினார் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், இது குறித்து 15ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கூறி, கர்நாடக அரசுக்கும், பாவனி சிங்குக்கும், சட்ட செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மேல்முறையீட்டு வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் நாகேஷ் ஆஜராகி வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி குமாரசாமி, மனு மீதான விசாரனையை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் 13ஆம் தேதிக்குள் அன்பழகன் மனு தொடர்பாக அரசுத் தரப்பு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
புதிய புகார்
இதனிடையே ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், ‘‘1997-ம் ஆண்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அவரின் விளக்கத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்ததில் நிறைய பிழைகள் இருக்கின்றன. அதனை மீண்டும் மறு மொழிப்பெயர்ப்பு செய்ய உத்தரவிட வேண்டும்''என்றார்.
இதைத்தொடர்ந்து "ஜெயலலிதா அளித்த விளக்கத்தை கர்நாடக மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் சரியாக மொழிபெயர்க்க வேண்டும்" மறுமொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணங்களை வரும் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications