ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- இழுத்தடித்த அரசு வழக்கறிஞர் பவானிசிங் மனு தள்ளுபடி!

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகாததால் தமக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் இறுதி வாதத்தை பவானிசிங் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை கடந்த 7-ந் தேதி தொடங்க வேண்டும் என நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார்.
ஆனால் உடல்நிலை சரியில்லை எனக் கூறி அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் இறுதிவாதம் தொடங்க அவருக்கு 3 முறை வாய்ப்புகளை நீதிபதி வழங்கினார்.
இருப்பினும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் உடல்நிலை முழுமையாக குணமடையாததால் இறுதி வாதம் செய்ய ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி குன்ஹா கடந்த 15-ந் தேதி இறுதிவாதம் செய்யாத அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு அவருடைய ஒருநாள் ஊதியமான ரூ.60 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராகாததால் மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத விதிப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு மீது நேற்று மாலை நீதிபதி சத்யநாராயணா விசாரணை நடத்தினார். பின்னர் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். இன்றைய விசாரணையின் போது பவானிசிங்கின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சத்யநாரயணா உத்தரவிட்டார்.
இதனிடையே பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி இறுதிவாதத்தை தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications