ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் அப்பீல் செய்ய கர்நாடகாவுக்கு முழு உரிமை உள்ளது: சட்ட வல்லுநர்கள்
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடகாவுக்கு முழு உரிமை இருப்பதாக அம்மாநில சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு வழக்கு தொடுத்துள்ளது. திமுகவின் க.அன்பழகன் தரப்பும் மேல்முறையீடு செய்துள்ளது.
பிப்ரவரி 2ம் தேதி முதல் இதில் இறுதி வாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில், வழக்கில் விசாரிக்க வேண்டிய அம்சங்களை தாக்கல் செய்ய மூன்று தரப்புக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முதலில் கர்நாடக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடகா வாதம்
கர்நாடகா தாக்கல் செய்த மனுவில், தப்பான கூட்டல் மூலமாக ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டதோடு, கூட்டலை சரி செய்தாலே, ஜெயலலிதா குற்றவாளி என்பது நிரூபணமாகிவிடும் என்று தெரிவித்திருந்தது. மொத்தம் 16 விஷயங்களை விசாரிக்க கர்நாடகா கேட்டுக்கொண்டது.

தமிழக உள் விவகாரமாம்
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பில் நேற்று பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கர்நாடகா அப்பீல் செய்யவே உரிமையில்லாத மாநிலம் என்று வாதிடப்பட்டுள்ளது. தமிழக உள் விவகாரங்களில் கர்நாடகா தலையிடுவதாக, இந்த வழக்கை வர்ணித்துள்ளது ஜெ. தரப்பு.

பதிலளிக்க மறுப்பு
இதுகுறித்து வெளிப்படையாக கருத்து கூறாமல், கோர்ட்டில் பதிலளிக்கலாம் என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கர்நாடக சட்ட அமைச்சக வட்டாரத்தில் கேட்டோம்.

உச்சநீதிமன்றமே அனுமதி
கர்நாடக சட்ட அமைச்சக வட்டாரங்கள் கூறியது: சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தும் பொறுப்பை உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு வழங்கி உத்தரவிட்டது. எனவே பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, வழக்கை நடத்தியது கர்நாடகா.

அப்பீலும் கர்நாடகாதான்
சிறப்பு நீதிமன்ற விசாரணையில், ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். எனவே கர்நாடக ஹைகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அப்போது, எதிர்தரப்பாக செயலாற்ற வேண்டியது கர்நாடக அரசுதான் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்திவிட்டது.

சட்டப்படிதான் கர்நாடகா
ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். எனவே, வழக்கை மேல்முறையீடு செய்யும் பொறுப்பு கர்நாடகாவுக்கு இருப்பதால் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே இதில் கர்நாடகா தானாக முன்வந்து எதையும் செய்யவில்லை. உச்சநீதிமன்ற ஆணை தெளிவாக இருப்பதால் மேல்முறையீடு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications