கார்த்தி சிதம்பரத்திற்கு 4வது முறையாக காவல் நீடிப்பு.. மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல்
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும், 3 நாட்கள் காவல் விதித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பிப்ரவரி 28ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகனான, கார்த்தி சிதம்பரம்.

பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு, முதலில் 1 நாள் காவலும் பிறகு 5 நாள் காவலும் விதிக்கப்பட்டிருந்தது. 3வது முறையாக கார்த்தி சிதம்பரத்திற்கு 3 நாள் காவல் வழங்கி கடந்த 6ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 நாள் காவல் முடிவடைந்ததையடுத்து, கார்த்தி சிதம்பரம் இன்று பட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் விசாரணை காலத்தில் வாய் திறக்க அடம் பிடிப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதியளிக்குமாறு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கைவிடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவர் இதுவரை, விசாரணைக்கு போதிய அளவு ஒத்துழைக்கவில்லை என்பதால், மேலும் 6 நாட்கள், காவல் நீடிப்பு செய்ய சிபிஐ கோரிக்கைவிடுத்தது. இதைகோர்ட் ஏற்றபோதிலும், மேலும் 3 நாட்களுக்கு மட்டும் காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications