பேரீச்சம் பழத்தால் விழும் அடி.. இஸ்ரேலுக்கு எதிராக சம்பவம் செய்யும் காஷ்மீர் இஸ்லாமியர்கள்.. பின்னணி
ஜம்மு காஷ்மீர்: பாலஸ்தீனத்தின் காசா மீது 15 மாதமாக நடந்த போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. விரைவில் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் பாலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், போர் புரிந்த இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் வகையிலும் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தவும் ரமலான் நோன்பு மாதத்தில் காஷ்மீர் மக்கள் எடுத்து முடிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்த நிலையில் 200க்கும் அதிகமானவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மீது போரை தொடங்கியது. இந்த போர் கடந்த 15 மாதமாக நடந்தது. இஸ்ரேல் நாட்டின் விமானப்படை காசா மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் என்பது 90 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகும் கூட போர் நிறுத்தத்தை விரிவாக்கம் செய்ய இருதரப்பும் தயாராக உள்ளன. இருப்பினும் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவிப்பதில் அவ்வப்போது ஹமாஸ் அமைப்பு இரட்டை வேடம் போடுகிறது. இதனால் போர் நிறுத்தம் என்பது வரும் காலத்திலும் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் இந்த போர் நிறுத்தம் என்பது நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். அப்போது தான் காசாவில் வீடுகளை இழந்து வசிக்கும் மக்கள் படிப்படியாக இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
இதற்கிடையே தான் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன. இஸ்ரேல் உடனான வர்த்தகத்தை நிறுத்தி உள்ளன. இப்படியான சூழலில் தான் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீரில் உள்ள கடைக்காரர்கள், மக்கள் எடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அவர்களின் புனித பண்டிகையான ரம்ஜானுக்கான நோன்பை தொடங்கி உள்ளனர். இந்த நோன்பு காலத்தில் தான் இஸ்ரேலுக்கு எதிரான முடிவை ஜம்மு காஷ்மீர் மக்கள் கையில் எடுத்துள்ளனர். இது இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதாவது ரம்ஜான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு எடுத்து கொள்வது இல்லை. இப்படியாக நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் இரவில் இஃப்தார் விருந்து உண்டு நோன்பை முடிப்பார்கள். இந்த இஃப்தார் நோன்பில் பழவகைகள் இருக்கும். குறிப்பாக பேரீச்சம்பழம் என்பது முக்கிய பங்கு வகிக்கும். இப்படியான சூழலில் தான் ஜம்மு காஷ்மீரில் கடைக்காரர்களும், பொதுமக்களும் இஸ்ரேல் நாட்டின் பேரீச்சம் பழத்தை புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜம்மு காஷ்மீருக்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து அதிக அளவில் பேரீச்சம் பழம் என்பது வரும். இந்த முறை அதனை வியாபாரிகளும், பொதுமக்களும் புறக்கணித்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இஸ்ரேல் பேரீச்சம் பழங்களை அவர்கள் புறக்கணித்துள்ளனர். இதற்கு பதிலாக அவர்கள் மேற்காசிய நாடுகளில் இருந்து பேரீச்சம் பழத்தை இறக்குமதி செய்கின்றனர். அதாவது இஸ்ரேலுக்கு பதில் சவுதி அரேபியா, ஈரான், மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவில் இருந்து பேரீச்சம் பழத்தை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். கல்மி, மப்ரூம், அஜ்வா மற்றும் மஜ்தூல் உள்ளிட்ட பிரீமியம் வகை பேரீச்சம் பழங்கள் நிரம்பி வழிகின்றன.
இதுபற்றி ஸ்ரீநகரில் லால் சவுக்கை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ‛‛பொதுவாக ரம்ஜான் நோன்பு கால ஷாப்பிங்கின்போது காஷ்மீரில் உள்ள அனைத்து கடை வீதிகளிலும் கூட்டம் அலைமோதும். இந்த முறையும் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் இஸ்ரேல் பேரீச்சம் பழங்களை புறக்கணிக்கின்றனர். இதனால் நாங்களும் இஸ்ரேல் நாட்டு பேரீச்சம் பழங்களுக்கு பதில் வேறு நாட்டின் பேரீச்சம் பழகத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். காஷ்மீர் முழுவதும் இது எதிரொலிக்கிறது.
பாலஸ்தீனத்தின் பிரச்சினைகளை எங்களால் நேரடியாக தீர்க்க முடியாது. ஆனால் பாலஸ்தீனத்தின் மீது போர் புரியும் இஸ்ரேலின் வருமானத்தை எங்களால் இப்படி தடுக்க முடியும். இதன்மூலம் இஸ்ரேல் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட எங்களின் பணத்தை கொடுத்து இஸ்ரேலுக்கு உதவி செய்யாமல் இருக்க முடியும்'' என்றார்.
அதேபோல் மகாராஜா பஜாரை சேர்ந்த வியாபாரி உமர் மெஹ்ராஜ் கூறுகையி்ல, ‛‛பாலஸ்தீனத்தின் மீதான போரால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதுபற்றி படிக்கும்போதோ, தொலைக்காட்சி செய்திகளில் கேட்கும்போதோ இதயம் அழுகிறது. இந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டு பேரீச்சம் பழங்களை நான் புறக்கணிக்க தொடங்கி இருக்கிறேன். இனியும் அதனை தொடர உள்ளேன்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டு பேரீச்சம் பழத்தை நான் ஒருபோதும் வாங்க மாட்டேன். பாலஸ்தீனத்தில்அமைதியை கொண்டு வர அல்லா உதவ வேண்டும். பாலஸ்தீனத்தின் நீதிக்காக என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்ய அல்லா எனக்கு தேவையான வலிமையை கொடுக்க வேண்டும்'' என்றார். இப்படியாக போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ரமலான் நோன்பு மாதத்தில் ஜம்மு காஷ்மீர் இஸ்லாமியர்கள் இஸ்ரேல் நாட்டின் பேரீச்சம்பழத்தை புறக்கணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications