கேரளாவின் முதல் அக்ரி ட்ரோன் பைலட்! ஒரு மகன் படிப்பது போலந்து, இன்னொரு மகன் கனடா!
திருச்சூர்: ட்ரோன் மூலம் வேளாண்மை செய்வதைக் கற்றுக் கொண்டு கேரளாவில் உள்ள பெண் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தனது மகன்களை வெளிநாட்டில் படிக்க வைத்துச் சாதித்துக் கட்டியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சுதா தேவதாஸ். இவர்தான் கேரளாவின் முதல் ட்ரோன் பைலட் விவசாயி. திருச்சூர் மாவட்டம் கூழூர் கிராம பஞ்சாயத்து சிபிஎம் உறுப்பினராகவும் இருக்கிறார் சுதா தேவதாஸ். இவருக்கு இப்போது 51 வயதாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நடந்த லக்பதி தீதிஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சுதா, பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடி இருந்தார். அதன் பின்னர்தான் இவரைப் பற்றி கேரள மக்களே அதிகம் அறிந்துகொண்டனர்.

மத்திய அரசின் ட்ரோன் திதி யோஜனா திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. அதற்காக மையம் சென்னையில் உள்ளது. அக்ரி-ட்ரோன்களை எப்படிப் பறக்க விடுவது? அதன் மூலம் வேளாண்மை வேலைகளை எப்படி எளிதாகச் செய்வது என்பதை இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் கற்கலாம். இதற்காகக் கேரளாவைச் சேர்ந்த 49 பெண்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதில் சுதாவும் ஒருவர். இந்தப் பயிற்சி வகுப்பு பற்றிப் பேசிய மனோரம்மாவுக்கு பேசிய சுதா, "பாலக்காட்டைச் சேர்ந்த 63 வயது பெண் ஒருவர்தான் எங்கள் சுய உதவிக் குழுவிலேயே மூத்த பெண்மணி. இளையவர் ஒருவருக்கு 30 வயது" என்கிறார்.
இந்தத் திட்டத்திற்காகச் சென்னை, புனே, குருகிராம் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 15 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ட்ரோன் பணியாளர்களை உருவாக்கி கிராமப்புற பெண்களின் வேளாண்மை வருமானத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். இந்தப் பயிற்சிக்குப் பிறகு, மத்திய அரசு ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிற்கும் 10 கிலோ எடையுள்ள ட்ரோன் ஒன்றையும் வழங்கி வருகிறது.
சென்னையில் பயிற்சிக்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் திரவ உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கையாள்வது குறித்து ஐந்து நாள் பயிற்சியை மாநில அரசின் வறுமை ஒழிப்புத் துறை குடும்பஸ்ரீ சுய உதவிக்குழு பெண்களுக்கு அளித்தது. "இது ஆளில்லா விமானத்தைப் பறக்கவிடுவது மட்டுமல்ல, ஆண்ட்ராய்டு போனை எப்படிப் பயன்படுத்துவது? அது உங்களுக்குத் தெரிந்தால் இந்த வேலை எளிதானதாக இருக்கும். உரங்கள் இடுவது, பூச்சிக்கொல்லிகளின் எத்தனை வகைகள் உள்ளன? அவற்றின் சரியான அளவு என்ன? அதைப் பயன்படுத்த வேண்டிய நேரம் என்ன? ஆகியவற்றையும் நாங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் வேளாண்மை தொழிலைச் சரியாகச் செய்து லாபம் ஈட்ட முடியும்" என்றார் சுதா.
ஒரு ஏக்கர் நெல் வயலில் உரம் தெளிக்க ஒரு ஆளில்லா விமானம் 15 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்றார். இதையே கையால் செய்தால் ஒரு மணி நேரமாகும். இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.400 கட்டணம் வசூலிக்கிறது குடும்பஸ்ரீ சுய உதவிக்குழு என்கிறார். ஜல்கானில் நடந்த லக்பதி தீதி மாநாட்டிற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ட்ரோன் பைலட்டாக இருப்பது மட்டும் காரணமல்ல.
சுதாவின் சுய உதவிக் குழுவான பிரகிருதியில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் எம்டெக் பட்டதாரி, இளைய மகன் பிடெக் பட்டதாரி. அது பற்றி சுதா கூறுகையில், "கடந்த 13 ஆண்டுகளில் எங்களது வாழ்க்கை முறை மாறிவிட்டது. இந்த ஆகஸ்ட்டில் என் மூத்த மகன் கனடாவுக்குச் சென்றுவிட்டான். இளையவன் போலந்தில் எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறான். அரிசிப் பொருட்களை விற்றுக் கிடைத்த பணத்தையெல்லாம் நான் அவர்களின் கல்விக்காகச் செலவு செய்தேன்" என்கிறார். தொடர்ந்து பேசிய சுதா, "எங்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே மாதிரியான வெற்றிக் கதைகளைக் கொண்டுள்ளனர்" என்கிறார்.
ஜனவரி 6 ஆம் தேதி பிரகிருதியின் 12 உறுப்பினர்கள் பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் சென்று திரும்பினர். சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டு ரூ.6,000 சலுகையில் கிடைத்தது. நகரின் மிருகக்காட்சி சாலை மற்றும் பூங்காக்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகப் பெண்கள் தலா ரூ.2,000 செலவு செய்தனர். "எங்களுக்கு வயதாகிவிட்டது. நாங்கள் விமானத்தில் பயணம் செய்ய விரும்பினோம். ஆனால் எங்கள் கணவர்களில் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நாங்கள் உடனே திரும்பி வர முடிவு செய்தோம்" என்கிறார். இவர்கள் சுய உதவிக்குழுவில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று மட்டும் சொல்லித் தரவில்லை. சுயமரியாதையோடு எப்படி வாழ வேண்டும் என்பதையும் உலகிற்குச் சொல்லிக் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications