மருத்துவ மாணவி கொலை வழக்கு..சந்தீப் கோஷுக்கு சிக்கல்? சல்லடை போட்டு தேடிய சிபிஐ..சிக்கிய ஆதாரம்?
கொல்கத்தா: இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிஐ. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 13 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும் தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவியின் மரணத்திற்கான சாத்தியக் கூறுகள், ஆதாரங்கள் உள்ளிட்டவை கிடைக்கிறதா எனவும், ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலையான மாணவி மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.10 முதல் 7.10 மணி வரை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருக்கிறது.
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து அவர் போராடி இருக்கிறார். மேலும் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் நகத்தில் இருந்த ரத்த மாதிரியும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் சஞ்சய் ராயின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதால் அவர் கொலையில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிபிஐ தொடங்க இருக்கிறது.
நேற்று கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 13 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நோயாளிகளுக்கு பராமரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்தின் மூலம் நிதி முறைகேடுகள் நடந்தது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ மாணவி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் கொல்கத்தா மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். நேற்று மேலும் இருவருக்கு சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் அதன் முடிவுகளை சாட்சியமாக பயன்படுத்த முடியாது என்றாலும் விசாரணைக்கு உதவியாக இருக்கும்.
கடந்த சனிக்கிழமை கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் உள்ளிட்ட நான்கு பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் சிபிஐ அதிகாரிகள். இந்த நிலையில் சந்திப் கோஷ் மீது சிபிஐ, நீதிமன்ற உத்தரவை எடுத்து மருத்துவக் கல்லூரியில் நடந்த ஊழல் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
வழக்கின் முன்னேற்றம் குறித்து மூன்று வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிற்கும் நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்திப் கோஷ் மற்றும் சஞ்சய் வசிஷ்ட் உள்ளிட்ட 13 பேருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. நிதி முறைகேடு மட்டுமல்லாமல் கொலை தொடர்பாகவும் சில ஆதாரங்கள் சிபிஐ வசம் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications