கொல்கத்தா மருத்துவர் கொலை! "நான் செமினார் ஹால் சென்ற போதே அவர் செத்து கிடந்தார்.." கைதான நபர் பகீர்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஆர் ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், உண்மையைக் கண்டறியும் சோதனையில் கூறிய சில தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரைக் கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

சோதனை: இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இதில் குற்றஞ்சாட்டப்பட்டோர், சந்தேக பட்டியலில் உள்ளவர்களிடம் உண்மையைக் கண்டறியும் சோதனையை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே உண்மையைக் கண்டறியும் சோதனையில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் என்ன சொன்னார் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. நேற்று நடந்து உண்மையைக் கண்டறியும் சோதனையில், தான் செமினார் ஹாலுக்கு சென்ற போது பயிற்சி மருத்துவர் ஏற்கனவே அங்கு உயிரிழந்து கிடந்ததாக சஞ்சய் ராய் கூறியுள்ளார்.
தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்றும் தான் நிரபராதி என்றும் சஞ்சய் சமீபத்தில் தான் நீதிமன்றத்தில் கதறி அழுதார். அதைத் தொடர்ந்து அவர் உண்மையைக் கண்டறியும் சோதனைக்குச் சம்மதம் தெரிவித்தார்.
அதிகாரிகள் தகவல்: அதன்படி நேற்றைய தினம் உண்மையைக் கண்டறியும் சோதனை அவரிடம் நடத்தப்பட்டது. அதில் சஞ்சய் ராய் கூறிய பல பதில்கள் பொய் மற்றும் தவறானது என்பது போல இருந்ததாக அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சோதனையின் போது சஞ்சய் ராய் பதற்றமாகவும் கவலையுடனும் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
உயிரிழப்பு: குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட பல ஆதாரங்களை வைத்து சிபிஐ அதிகாரிகள் அவனிடம் கேள்வி கேட்டுள்ளனர். இருப்பினும், அவை அனைத்திற்கும் சஞ்சய் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்துள்ளான். மேலும், செமினார் ஹாலுக்கு சென்ற போது பயிற்சி மருத்துவர் ஏற்கனவே இறந்து கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதைப் பார்த்ததும் அச்சப்பட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டதாக சஞ்சய் ராய் கூறியிருக்கிறான். அவன் கூறிய இந்தக் கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏனென்றால் இந்த பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் தான் விசாரித்தனர். அவர்கள் தான் சஞ்சயை கைதும் செய்தனர். பயிற்சி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை சஞ்சய் ராய் ஒப்புக்கொண்டதாகவும் கொல்கத்தா போலீசார் கூறியிருந்தனர். ஆனால், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சஞ்சய் முதல்முறையாகத் தான் ஒரு நிரபராதி என்று கூறியிருக்கிறார்.
நம்பும்படி இல்லை: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சஞ்சய் ராய் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே சிறை காவலர்களிடமும் கூட இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றே சஞ்சய் கூறியிருக்கிறான். அதேநேரம் அவன் கூறும் இந்த தகவல்கள் நம்பும்படி இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையைத் தவறாக வழிநடத்தவே அவன் இப்படிக் கூறி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சரியாகக் குற்றம் நடந்த சமயத்தில் முகத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அங்கே எதற்காக அவன் சென்றான் உள்ளிட்ட கேள்விகளுக்கு சஞ்சயால் விளக்கம் தர முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
