சிவப்பு வட்டம்.. யாரு இவங்க..? வன்முறையாளர்களை பிடிக்க பொதுமக்களிடம் உதவி கேட்ட கொல்கத்தா போலீஸ்!
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், கொல்கத்தா காவல்துறை, மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவ வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதலில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சஞ்சய் ராய், உண்மை கண்டறியும் சோதனையின் போது, தான் ஒரு நிரபராதி என, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனை மூலம் உறுதி செய்ய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதாக கொல்கத்தா காவல்துறையை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நேற்று கொல்கத்தா தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாணவர்கள் சென்றனர்.

சுமார் 10 கிலோமீட்டர் ஊர்வலமாக சென்ற மாணவர்களை தலைமைச் செயலகத்திற்கு சிறிது தூரம் முன்னதாக போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடையை மீறி மாணவர்கள் செல்ல முயன்றபோது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் தண்ணீரை பீச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தது.

இன்று காலை 6 மணிக்கு, கொல்கத்தாவில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் போக்குவரத்து வழக்கம் போலவே இருந்தது. பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல என்றும் சமூக விரோதிகள் என்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறினார். அவர்கள் தடுப்புகளை உடைத்து போலீசாரை தாக்க முயன்றனர்; கற்கள் வீசப்பட்டன, இதில் போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர், ஆனால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, கும்பலைக் கலைக்க காவல்துறையால் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஆளும் தரப்பு தெரிவித்தது.

இந்நிலையில், கொல்கத்தா காவல்துறை, நேற்று வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவ வேண்டும் என கொல்கத்தா காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொல்கத்தா போலீசார், எக்ஸ் தளத்தில், வன்முறையாளர்கள் மீது சிவப்பு வட்டம் போட்ட புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், தகவல் தெரிந்தவர்கள் நேரடியாகவோ அல்லது உள்ளூர் காவல் நிலையத்தின் மூலமாகவோ தெரிவிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications