கொல்கத்தா விவகாரம்.. மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வருக்கு 8 நாள் சிபிஐ காவல்.. நீதிமன்றம் அனுமதி
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி வரும் நிலையில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை 8 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் விட்டுச் சென்ற புளூடூத் மூலம் அடையாளம் காணப்பட்டு, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசராணை செய்து வருகின்றனர். மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 18 நாள்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சம்பந்தமே இல்லாத ஆட்கள் நிறைய பேர் மருத்துவமனையில் இருந்தது, பெண்ணின் பெற்றோருக்கு தாமதமாகவே தகவல் தெரிவிக்கப்பட்டது, தற்கொலை என்றும் அவர்களிடம் கூறியது, போலீஸார் மருத்துவமனைக்குள் வந்தபோது மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் அங்கு இல்லாதது, மருத்துவமனை நிர்வாகத்துடன் போலீஸார் பேசியது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, சந்தீப் கோஷுக்கு மேலும் சில உண்மை கண்டறியும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் மருத்துவர் அக்தர் அலி, சந்தீப் கோஷ் மீது குற்றம் சுமத்தினார். அநாதை சடலங்களை விற்பனை செய்வது, உயிரி மருத்துவக் கழிவுகள் கடத்தல், கமிஷன் அளிக்கும் மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்தது போன்ற முறைகேட்டில் சந்தீப் கோஷ் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரத்தில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, 2 வாரகால விசாரணைக்குப் பிறகு நிதி முறைகேடு விவகாரத்தில் சந்தீப் கோஷ் மற்றும் அவரது பாதுகாவலர், மருந்து, மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்த இருவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக, இந்திய மருத்துவச் சங்கத்தால் இவரை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இவர்கள் அனைரும் கொல்கத்தா அலிப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்ற சதி, மோசடி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் சந்தீப் கோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பத்து நாள்கள் காவல் தேவை என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அலிப்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications