கர்நாடகாவில் நாளை மறுநாள் பந்த்.. பஸ்கள் ஓடாது.. பெங்களூர் செல்வோர் உஷார்
Recommended Video

பெங்களூர்: மகதாயி நதிநீர் விவகாரத்தை முன்வைத்து, பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதிலும், வரும் 25ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
இந்த பந்த் போராட்டத்திற்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) ஆதரவு தெரிவித்துள்ளது. பெங்களூர் நகர பஸ் போக்குவரத்து கழகமான பிஎம்டிசியும் ஆதரவு தெரிவிக்கும் என தெரிகிறது.
இந்த பந்த் காரணமாக பெங்களூர் உட்பட மாநிலம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் அரசியல்
தமிழகத்துடன் காவிரி நதிக்காக கர்நாடகா மல்லுக்கட்டுவதை போல கோவா மாநிலத்துடன் மகதாயி நதிநீர் பங்கீட்டிலும் மோதுகிறது கர்நாடகா. கர்நாடகாவில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மத்தியிலுள்ள பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுத்து, நதிநீர் பங்கீட்டில் தங்கள் கோரிக்கையை நிலைநிறுத்த கன்னட அமைப்புகளும், மாநிலத்தை ஆளும் காங்கிரசும் திட்டமிட்டுள்ளது.

கர்நாடக பந்த்
இதன் ஒரு பகுதியாக ஜனவரி 25ம் தேதியான நாளை மறுநாள் கர்நாடக பந்த் நடத்த 2000த்துக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் இணைந்து அழைப்புவிடுத்துள்ளன. கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவரான வாட்டாள் நாகராஜ் இந்த அமைப்புகளை இணைத்து பந்த்துக்கு அழைப்புவிடுத்துள்ளார். கர்நாடக அரசும் மறைமுகமாக இதற்கு ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகம் ஆதரவு
பந்த்துக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, 23,000 பஸ்கள் அன்றைய தினம் ஓடாது. பெங்களூர் நகர பஸ் போக்குவரத்து கழகமான பிஎம்டிசியும் ஆதரவு தெரிவிக்கும் என கூறப்படுகிறது. எனவே கர்நாடகாவில் பொது போக்குவரத்து ஸ்தம்பிக்கும். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் வரலாம் என தெரிகிறது.

நாளை மறுநாள் பெங்களூர் செல்ல வேண்டாமே
கர்நாடக பஸ்கள் இயங்காத நிலையில் தமிழகம் உள்ளிட்ட வேறு மாநில பஸ்களை அம்மாநிலத்திற்குள் இயங்க கன்னட அமைப்பினர் அனுமதிக்க மாட்டார்கள். எனவே தமிழகத்திலிருந்து நாளை மறுநாள் பெங்களூருக்கு பயணிக்க யாருக்கேனும் திட்டமிருந்தால் அதை கைவிடுவது உத்தமம். கண்டிப்பாக பெங்களூர் சென்றேயாக வேண்டிய சூழல் இருந்தால் எல்லை நகரமான ஒசூர் வரை வந்து அங்கிருந்து தனியார் வாகனங்களில்தான் பெங்களூர் செல்ல முடியும். மாலை 6 மணிக்கு மேல் பந்த் முடிவடைந்து பஸ்கள் ஓடத்தொடங்கும்.

பெங்களூருக்கு மட்டும் ஒரு பந்த்
இதனிடையே பிப்ரவரி 4ம் தேதி, மகதாயி விவகாரத்திற்காக பெங்களூரில் மட்டும் பந்த் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. இதனால் அன்றைய தினமும் வெளி மாநில போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பெங்களூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் அன்றைய தினம் மீண்டும் பந்த் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications