அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
சண்டிகர்: பஞ்சாபில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரயில்கள் விபத்தில் சிக்கி வருவது விவாதங்களை கிளப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால் இவ்வளவு பழமை வாய்ந்த ரயில்வே துறையில் சமீப நாட்களாக நடக்கும் விபத்துக்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.

குறிப்பாக ஒடிசா ரயில் விபத்து, இந்திய ரயில்வே துறை மீது கடுமையான விமர்சனங்களை கிளப்பியது. மேற்கு வங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு, 12841 எனும் எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இப்படியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ம் இயக்கப்பட்ட ரயில் ஒடிசாவில் பெரும் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். அதேபோல 1,000க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்தியன் ரயில்வே வரலாற்றில் இது மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால், சம்பவ இடத்தை பார்வையிட்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இனி இதுபோன்று நடக்காது என்று உறுதியளித்தார்.
இவர் உறுதியளித்து 6 மாதத்திற்குள் மற்றொரு கோர விபத்து ஆந்திராவில் நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா பகுதியில், பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 13 பேர் வரை உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், அரசு தரப்பில் 8 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டது.
இது தவிர ஆங்காங்கே சிறு சிறு விபத்துகள் நடந்தன. தமிழ்நாட்டில், கடந்த டிசம்பர் மாதம் பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் செங்கல்பட்டு-சென்னைக்கு இடையே ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய 24 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
மற்றபடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் ரயில்கள் அவ்வப்போது தடம் புரண்டு விபத்தில் சிக்குகின்றன. பணிமனைக்கு செல்லும் ரயில் என்பதால், அதில் பயணிகள் இருக்கவில்லை. எனவே உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், ரயில் சேவைகள் சில மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இன்று மற்றொரு விபத்து நடந்திருக்கிறது. சிர்ஹிந்தில் உள்ள மாதோபூரில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதியுள்ளன. இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில், ரயிலின் லோகா பைலட்டுகள் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications