தமிழகத்திலும் "இந்தியா" கூட்டணி அம்போ? திமுகவின் மாறும் வியூகங்களால் மண்டை காயும் விசிக, காங்கிரஸ்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் பல மாநிலங்களில் "இந்தியா" கூட்டணியையே இல்லாமல் செய்துவிடும் நிலைமையே உருவாகிக் கொண்டிருக்கிறது. திமுகவின் வியூகங்களும் மாறுவதால் "இந்தியா" கூட்டணி இல்லாமல் போகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெறும் சூழல் உருவாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க உருவாக்கப்பட்டது "இந்தியா" கூட்டணி. காங்கிரஸையும் உள்ளடக்கிய 28 பிரதான எதிர்க்கட்சிகளைக் கொண்டதாக உருவானது "இந்தியா" கூட்டணி. இதில் மாநில கட்சிகள்தான் அதிகம். இதனால் லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டிலும் மாநில கட்சிகள் கை ஓங்கியே இருக்கின்றன.

கொந்தளிக்கும் காங்கிரஸ்: மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு சொற்பமான தொகுதிகளை ஒதுக்கவே கூட்டணி கட்சிகள் முன்வந்துள்ளன. குறிப்பாக மேற்கு வங்கத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் திரிணாமுல் காங்கிரஸும், சமாஜ்வாதியும் ஒதுக்குவதாக கூறி இருக்கின்றன. இது காங்கிரஸை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
திமுக அணியில் பாமக?: இந்த நிலையில் தமிழ்நாட்டில் கவுரவமாக 15 தொகுதிகளைக் கேட்டு 9, 10 தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என நம்பிக்கையாக இருந்தது காங்கிரஸ். திமுக தரப்பிலும் தொடக்கத்தில் இந்த உறுதி மொழி தரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பாமகவை திமுக கூட்டணியில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடக்கின்றன; இதன் ஒரு பகுதியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை நேரிலேயே சந்தித்தும் பேசினார். இதனையடுத்து திமுக கூட்டணியில் பாமக இணையவே அதிக வாய்ப்புகள் என்கிற நிலைதான் உள்ளது.
காங்கிரஸுக்கு சொற்ப இடங்கள்தான்?: இதனால் காங்கிரஸுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் என குறைத்துவிட்டதாம் திமுக. இதனையே சென்னையில் நேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்த திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்பியும் விளக்கி இருக்கிறார். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போல இங்கேயும் சொற்ப இடங்கள்தானா? என்கிற விரக்தியில் இருக்கிறதாம் காங்கிரஸ்.
பாமக உள்ளே.. விசிக வெளியே? : இன்னொரு பக்கம், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் இயல்பாகவே விடுதலை சிறுத்தைகள் வெளியேறும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன் உள்ள ஒரே வாய்ப்பு அதிமுக அணிதான். திமுக கூட்டணியில் அதிகபட்சம் 2 இடங்கள்தான் என்ற நிலையில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக கூடுதலாக சில தொகுதிகளை ஒதுக்கக் கூடும்.
என்னவாகும் "இந்தியா" கூட்டணி?: அதேபோல, திமுக அணியில் சொற்ப இடங்களை வாங்கியபடி அமைதி காப்பதா? அல்லது திமுக அணியில் இருந்து வெளியேறி அதிமுக அணியில் இணைவதா? என்கிற குழப்பமும் காங்கிரஸில் இயல்பாகவே எழுந்துள்ளது. விசிகவும் காங்கிரஸும் திமுக அணியை விட்டு வெளியேறினால் தமிழ்நாட்டிலும் "இந்தியா" கூட்டணி இல்லாமல் போகும் நிலைமைதான் உருவாகும். கேரளாவில் "இந்தியா" கூட்டணியில் இருந்த போதும் காங்கிரசும் இடதுசாரிகளும் இணைந்து ஒரே அணியாக நிற்க முடியாது- அங்கு "இந்தியா" கூட்டணி என்பது இல்லை. அதேபோல தமிழ்நாட்டிலும் "இந்தியா" கூட்டணி காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications