‛அரசியல் என்ட்ரி’.. பாஜகவில் சேரும் யுவராஜ் சிங்? லோக்சபா தேர்தலில் பஞ்சாப்பில் போட்டி! பரபர தகவல்
சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் அவர் போட்டியிட உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் யுவராஜ் சிங். இந்தியா கடந்த 2008 ல் 20 ஓவர் கிரிக்கெட் உலககோப்பை வெல்லவும், கடந்த 2011ம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங்.

தனது அதிரடியான பேட்டிங் மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு வெற்றிகளை குவித்து தந்தவர் யுவராஜ். பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் வந்து கலக்கிய யுவராஜ் சிங், சுழற்பந்தும் வீசி இக்கட்டான நேரங்களில் எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை கபளீகரம் செய்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர்.
யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் தனது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் யுவராஜ் சிங் தற்போது அரசியலில் என்ட்ரி கொடுத்து அடுத்த இன்னிங்ஸை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக பஞ்சாப்பில் பாஜகவை பலப்படுத்தும் பணியில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பிரமுகர்களை பாஜகவுக்கு கொண்டு வரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கையும் பாஜகவில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
மேலும் இதுதொடர்பாக யுவராஜ் சிங்குடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதோடு யுவராஜ் சிங் தொடர்ந்து பஞ்சாப் பாஜக மாநில தலைவர் சுனில் ஜக்கார் மற்றும் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்ள இளம் அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் யுவராஜ் சிங் பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பாஜக தலைமை மற்றும் யுவராஜ் சிங்கின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் அதனை மறுக்கவில்லை.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் ஐக்கியமாகிறார் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒருவேளை யுவராஜ் சிங் பாஜகவில் இணையும் பட்சத்தில் அவர் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதியில் பாஜக எம்பியாக நடிகர் சன்னி தியோல் உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட ஆர்வம் காட்டாத நிலையில் யுவராஜ் சிங்கை அங்கு களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சித்துவும் மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் அரசியலுக்கு பாஜக மூலம் தான் என்ட்ரி கொடுத்தார். பாஜக சார்பில் அமிர்தசரஸ் நாடாளுமன்ற தொகுதியில் 3 முறை எம்பியாக இருந்தார். அதன்பிறகு பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப்பில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக செயல்பட்டார்.
இவர் தலைமையில் தான் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. இதில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்து பகவந்த் மான் முதல்வரானார். இதையடுத்து சித்து காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா யெ்தார். தற்போது பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே கடும் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் பாஜகவில் இணைய அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications