மே. வங்கத்தை தொடர்ந்து பஞ்சாப்.. காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது.. தனித்தே போட்டி- ஆம் ஆத்மி அதிரடி!
அமிர்தசரஸ்: லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முறிந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்த நிலையில் ஆம் ஆத்மியும் தனித்து போட்டியிடுவோம் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்தி வருகின்றன.

மே.வங்கம் மமதா அதிரடி: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் காங்கிரஸும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தின. காங்கிரஸுக்கு 2 முதல் 5 தொகுதிகள் வரை ஒதுக்க திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. இதனை ஏற்க மறுத்து திரிணாமுல் காங்கிரஸை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.
பஞ்சாப் தனித்து போட்டி- ஆம் ஆத்மி: இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை ஆம் ஆத்மி கட்சி நடத்தி வந்தது. பஞ்சாப் மாநில தொகுதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மேற்கு வங்கத்தைப் போல காங்கிரஸ் தலைவர்கள் முரண்டு பிடித்து வந்தனர்.
13 தொகுதிகளில் தனித்து போட்டி: இந்நிலையில் அமிர்தசரஸில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பஞ்சா முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும் என பலமுறை சொல்லி இருக்கிறோம். பஞ்சாப் மாநில மக்கள் 92 சட்டசபை தொகுதிகளில் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.. மக்களுக்கு நலத் திட்டங்களை செய்வதற்கு அதிகாரத்தை ஆம் ஆத்மிக்கு கொடுத்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி சமரசத்துக்கு இடம் கொடுக்காது என அறிவித்துள்ளார். இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும். இது காங்கிரஸுக்கு ஒரே நாளில் கிடைத்த 2-வது மரண அடி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2019 லோக்சபா தேர்தல்- பஞ்சாப்: 2019 லோக்சபா தேர்தலில் பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது; சிரோமணி அகாலி தளம் 2, பாஜக 1 இடத்தில் வென்றது. அத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
2021 சட்டசபை தேர்தல்- பஞ்சாப்: ஆனால் 2021 பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 18 இடங்கள்தான் கிடைத்தன. அகாலி தளம் 3 தொகுதிகளில் வென்றது.
தற்போது ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி முறிவடைந்துள்ளதால் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், அகாலி தளம் என அத்தனை கட்சிகளும் தனித்தே போட்டியிடும் நிலைமை உருவாகி உள்ளது. இது ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கே ஆதாயம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications