கணிப்புகளை தகர்த்து பாஜகவை "கதற வைத்த" மமதா பானர்ஜி.. ருத்ர தாண்டவ வெற்றியின் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அதிக இடங்களைத்தான் கைப்பற்றும் என்றன அத்தனை கருத்து கணிப்புகளும். அனைத்தையுமே தவிடு பொடியாக்கி பாஜகவுக்கு கடும் பின்னடைவை கொடுத்துவிட்டார் மமதா பானர்ஜி.

மேற்கு வங்க மாநிலமானது இடதுசாரிகள் vs காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியலில் சிக்கி இருந்தது ஒரு காலம். ஆனால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய மமதா பானர்ஜி எனும் பெண் சிங்கம் கைப்பற்றி சரித்திரம் படைத்தது என்பது மிகை சொல் அல்ல.

Lok Sabha Election 2024 west bengal 2024

மமதாவின் கோட்டை: மேற்கு வங்கம் இப்போது திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாகிவிட்டது. அப்படியானால் இடதுசாரிகள்தான் பிரதான எதிர்க்கட்சியா? என்றால் இல்லை. அந்த இடத்தில் பாஜக அமர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் இடதுசாரிகள், உயர்ஜாதியினராக இருந்தனர்; இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய இடதுசாரிகள் அப்படியே பாஜகவில் கரைந்து 'ஜெய் ஶ்ரீராம்' என முழங்குகின்றனர். இதனால் இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் அப்படியே பாஜகவுக்கு மடை மாறிப் போய்விட்டது. இடதுசாரிகளே மேற்கு வங்கத்தில் இல்லை என்கிற நிலைமை உருவானது.

தவிடு பொடியான கணிப்புகள்: தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகள், எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும்; திரிணாமுல் காங்கிரஸுக்கு பலத்த அடி விழும் என்றன. ஆனால் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்தான் 29 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது. பாஜகவுக்கு 12 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது. இடதுசாரிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும் பாஜக 18 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. காங்கிரஸ் 2 இடங்களில் வென்றது. அப்போதும் இடதுசாரிகளுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

சரி மேற்கு வங்க மாநிலத்தில் அத்தனை கணிப்புகளையும் மமதா பானர்ஜி தகர்த்து தவிடு பொடியாக்கியதுதான் எப்படி? என்னதான் நடக்கிறது மேற்கு வங்கத்தில்? என்பது இயல்பான கேள்விதான்.

எப்படி சாதித்தார் மமதா?: மேற்கு வங்கத்தில் மமதாவின் வெற்றிக்கு பிரதான காரணங்கள் 1) மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு மீதான அதிருப்தி 2) பாஜகவின் அதீதமான இஸ்லாமியர் வெறுப்பு பேச்சும் தீவிரமான இந்துத்துவா வெறித்தனமான பேச்சும் 3) மமதா பானர்ஜி தலைமையிலான மாநில அரசின் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்கள்.

பாஜகவை கதற வைத்த திரிணாமுல்: மேற்கு வங்கத்தின் வடபகுதியில் 2019-ல் பாஜக 7 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு அபரிதமான வெற்றியை பாஜகவால் வெல்ல முடியவில்லை. மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் பாஜகவிடம் இருந்து 5 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது. அதேபோல 2019-ல் இழந்த அசன்சோல் தொகுதியிலும் திரிணாமுல் வென்றுவிட்டது. பழங்குடி வாக்காளர்களைக் கொண்ட ஜங்கல்மஹாலிலும் மமதாவின் கொடியே பறக்கிறது.

இஸ்லாமியர் வாக்குகள்: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 43.3%-ல் இருந்து 45.76% ஆக அதிகரித்துள்ளது. மமதா பானர்ஜியின் வெற்றிக்குப் பின்னால் அதாவது வலிமையான வெற்றியின் பின்னால் இருப்பது சிறுபான்மையினர் வாக்குகள்.. குறிப்பாக முஸ்லிம் ஓட்டுகள்தான். இதனால்தான் 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வென்று வந்த மமதாவின் பரம வைரியான காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இம்முறை வீழ்த்தப்பட்டுள்ளார். மாஜி கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் 85022 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை உமிழ்ந்து பேச பேச மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நோக்கி முஸ்லிம்கள் அலை அலையாக படையெடுத்து வாக்குகளை கொட்டிவிட்டுப் போய்விட்டனர் என்பதுதான் நிதர்சனம்.

மக்கள் நலத் திட்டங்கள்: இன்னொரு பக்கம் மமதா பானர்ஜியின் மாநில அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ1,000, ரூ1,200 நிதி உதவி வழங்கும் திட்டம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. மேற்கு வங்கத்தின் வாக்கு சாவடிகளில் பெண்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களிக்க இதுவுமொரு காரணம். இதற்கு அப்பால, மேற்கு வங்க மாநிலத்துக்கான 100 நாள் வேலை திட்ட நிதி உதவியை மத்தியில் ஆண்ட பாஜக அரசு நிறுத்தி வைத்து விளையாடிப் பார்த்தது. இந்த விளையாட்டு ஒட்டுகளில் வினையாகிப் போனதும் நிஜம். பாஜகவின் வாக்கு சதவீதம் 40.25%-ல் இருந்து 38.73% ஆக குறைந்தும் போனது. மமதா பானர்ஜி எனும் இரும்புப் பெண்மணியும் மேற்கு வங்கத்தின் குக்கிராமங்களில் கூட ஆழமாக வேர்பிடித்து நிற்கிற திரிணாமுல் காங்கிரஸும் இன்னமும் அந்த மாநில மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவே இருக்கின்றனர் என்பதுதான் லோக்சபா தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+