ஜனநாயகக் கடமையாற்றினார் பிரதமர் மோடி.. தேர்தல் ஆணையத்துக்கும் பாராட்டு! என்ன சொன்னார் தெரியுமா?
அகமதாபாத்: லோக்சபா தேர்தல் 2024 மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
3ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினைபதிவு செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
3ஆம் கட்ட தேர்தல்: அசாமில் 4, பிஹாரில் 5, சத்தீஸ்கரில் 7, டையூ-டாமனில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமித் ஷா, சுப்ரியா சிலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி: இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தொடர்ந்து தனது பாதுகாப்பு கான்வாயை வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் முன்னே நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து சாலையில் நடந்து வந்தார். அவருடன் மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வந்தார்.

வாக்கு செலுத்தினார்: தொடர்ந்து சாலையின் இரு புறமும் திரண்டு இருந்த மக்களை சந்தித்து கை அசைத்தபடி வந்த பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு தனது ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்து பின் தனது விரலில் மையிட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக நரேந்திர மோடி வந்தபோது சிறுமி ஒருவர் அவரது உருவப்படத்தை ஓவியமாக வரைந்திருந்தார். அதனைப் பார்த்த ரசித்த மோடி, அதில் தனது கையெழுத்தை இட்டு சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு: வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி," மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு பதிவாக வேண்டும்.. மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.. வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.. தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications