தண்டவாளங்களில் விவசாயிகள் மறியல்! பயணிகளுக்கு ரூ 1.49 லட்சம் திருப்பி கொடுத்த லூதியானா ரயில் நிலையம்
பஞ்சாப்: ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 3 விவசாயிகளை விடுவிக்கக் கோரி கடந்த 5 நாட்களாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால், டிக்கெட்டை ரத்து செய்த பயணிகளுக்கு ரூ 1.49 லட்சத்தை லூதியானா ரயில்வே நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது.
இந்த ரயில் மறியல் போராட்டம் கடந்த 17ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனால் ரயில் பயணத்திற்கு டிக்கெட் புக் செய்த பயணிகள், ரயில்கள் இயக்கப்படாததை அடுத்து பயணத்தை ரத்து செய்து வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டத்தால் அம்பாலா லூதியானா- அமிருதசரஸ் இடையே 73 ரயில்கள் நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்டன. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 13 ஆம் தேதி முதல் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதிகளில் ஷம்பு மற்றும் கனௌரியில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் கடந்த முறை போல் டெல்லிக்குள் நுழையாமல் இருக்க எல்லைகளில் போலீஸார் தடுப்புகளை வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் 3 விவசாயிகளை ஹரியானா போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஷம்புவில் உள்ள லூதியானா- அமிருதசரஸ் வழித்தடத்தில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை கடந்த புதன்கிழமை அதாவது 17ஆம் தேதி முதல் தொடங்கினர்.
இந்த போராட்டம் நேற்று 5 ஆவது நாளாக நீடித்தது. இதனால் அந்த வழித்தடத்தில் 73 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 விவசாயிகள் விடுவிக்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மேற்கண்ட வழித்தடத்தில் ரயில்கள் இயங்காத நிலையில் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டனர். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரத்து செய்த பயணிகளுக்கு ரூ 1.49 லட்சத்தை லூதியானா ரயில் நிலைய நிர்வாகம் திருப்பி அளித்துள்ளது.
அது போல் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்குள்பட்ட 1439 பயணிகளுக்கு ஃபெரோஸ்பூர் ரயில் நிலைய நிர்வாகம் ரூ 7.04 லட்சத்தை திருப்பி கொடுத்தது. கடந்த 4 நாட்களுக்கு 3,821 பயணிகளுக்ரூ ரூ 20.12 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டது. அமிருதரஸ், புது டெல்லி இன்டர்திட்டி ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அமிருதசரஸ், லூதியானா, பதின்டா, ஃபசில்கா, ஹிஸார் ஆகிய பகுதிகளை சேர்ந்த பயணிகள் அவதியடைகிறார்கள்.


Click it and Unblock the Notifications
