இரட்டை இலை சின்ன வழக்கு விசாரணை: புறக்கணித்த தீபா பேரவை
தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இரட்டை இலை சின்ன வழக்கின் இறுதி விசாரணையை தீபா அணி புறக்கணித்துள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதி விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் தீபா தரப்பு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.
அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.

அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன.
இதைனையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் கெடு விதித்தது.
விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்தரவிட்டது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் சார்பிலும், தினகரன் சார்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இதனிடையே இரட்டை இலை சின்னம் கேட்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தீபா பேரவை அணி இந்த விசாரணையை புறக்கணித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கூட அறிக்கை வெளியிட்ட தீபா, தொடர்ந்து 5 முறை டெல்லிக்கு நமது அணியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் சிறப்பாக வாதாடியுள்ளோம். தற்போது உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை மட்டும் கணக்கில் வைத்து தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றார்.
நாடு போற்றும் வகையில் அஇஅதிமுக கட்சியையும் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் நமது அஇஅதிமுக(ஜெ தீபா) அணிக்கு வெற்றி வாகை சூடிடும் வகையில் அளித்திடும் நல்ல தீர்ப்பை நாடும் ஏடும் போற்றும் வகையில் நமக்கு வெற்றி செய்தியினை வரவிருக்கிறது என்று கூறிய தீபா இப்போது விசாரணைக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இறுதி விசாரணைக்கு செல்லாமல் புறக்கணித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications